காலமுறை ஊதியம் கோரி ஜனவரி 29 அன்று சென்னையில் சத்துணவு ஊழியர்கள் நடத்திய 24 மணி நேர உண்ணாநிலை போராட்டம் வியாழனன்று (ஜன.30) நிறைவடைந்தது. இந்தப் போராட்டத்தையொட்டி ஜனவரி 29 அன்று மாலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை இயக்குநர் லில்லி, சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. ஜனவரி 30 அன்று காலை போராட்டத்தில் இருந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.மலர்விழி, மாநிலச் செயலாளர் ஆ.ஜெஸி ஆகியோர் மயக்கம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் போராட்ட பந்தலுக்கு வந்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.மலர்விழி, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவோம் என்றார். போராட்டத்தை ஆதரித்து இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் சம்சீர் முகமது, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சா.டேனியல் ஜெயசிங் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.பாஸ்கரன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். சத்துணவு ஊழியர் சங்க மாநில பொருளாளர் எம்.ஆர்.திலகவதி நன்றி கூறினார்.