அணையாத அறிவுத் தீ காரணமாகவே கலவரத் தீயைப் பற்ற வைக்க முடியவில்லை! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, டிச. 23 - தமிழ்நாட்டில் அறிவுத் தீ அணையாமல் இருப்பதால்தான் கலவர தீயை பற்ற வைக்க முடியவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் ப. திருமாவேலன் எழுதிய ‘தீரர்கள் கோட்டம் திமுக’, ‘திராவிட அரசியல் - திராவிட அரசு இயல்’, ‘முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்’ ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், “நூறாண்டுகளுக்கு முன்பு, தமிழகம் எப்படி இருந்தது; இன்று எப்படி இருக்கிறது. இதே காலகட்டத்தில், நாட்டின் பிற மாநிலங்கள் அடைந்திருக்கும் சமூக வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி - உட்கட்டமைப்பு வளர்ச்சி என்ன? மற்ற எல்லோரையும் விட, அனைத்து வகையிலும் நாம் இருபது ஆண்டுகள் முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம்மை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்” என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், “புத்தக வாசிப்புதான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற தியானம். அதனால் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்களாவது புத்தகங்களை வாசியுங்கள். உங்களைப் பார்த்து வீட்டில் உள்ள குழந்தைகளும் பின்பற்றுவார்கள். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தான் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட திருமாவேலன், “அறிவுத் தீ அணையாமல் இருப்பதால்தான் நம் ஊரில் கலவரத் தீயை பற்ற வைக்க முடியவில்லை. வாசிப்பும், வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது. நிமிர்ந்த தமிழ்நாடு ஒருநாளும் தலைகுனியாது. பாசிசவாதிகளின் பகல்கனவு இங்கு பலிக்காது. வரலாற்றைப் படிப்போம், தொடர்ந்து வரலாறு படைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.