வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட்!
ஸ்ரீஹரிகோட்டா, டிச. 24 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன மான (இஸ்ரோ) 6.1 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை முதன்முறையாக இந்திய மண்ணில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சென்னை அருகே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3-எம்.6 விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது விநாடியில், 520 கி.மீ. உயரத்தில், புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதையில், செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான புளுபேர்ட்-6 என்ற செல்போன் சேவைக்கான நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த செயற்கைக்கோள் சுமார் 6100 கிலோ எடையும், 223 சதுர மீட்டர் பரப்பளவுமான அமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் பிரெஞ்சு கயானாவில் இருந்து தான் ஏவப்பட்டு வந்தது. இப்போது இஸ்ரோ அதிக எடை யைத் தாங்கி செல்லும் ராக்கெட்டுகளை வடிவமைத்து வருவதால் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் இந்திய மண்ணில் இருந்தே ஏவப்படுகிறது. இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தி யதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்ற பெருமையையும் பெற்றுள்ளது எல்.வி.எம்.3-எம்.6 ராக்கெட். பாகுபலி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
