ஒன்றிய அரசை கண்டித்து வடசென்னையில் மறியல்
சென்னை, டிச.24- தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 29 தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் மறியல் நடைபெற்றது. வடசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே மாநில துணைத் தலைவர் அ.ஜானகிராமன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் வி.குமார், மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, மாவட்ட நிர்வாகிகள் பி.லூர்துசாமி, ஆர்.லோகநாதன், டி.வெங்கட், எம்.முத்து, ஏ.ஆர்.பாலாஜி, வி.ஜெயகோபால் (ஆட்டோ), ஆர்.ரவிக்குமார் (மின் ஊழியர் மத்திய அமைப்பு), மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அம்பத்தூர் சிஐடியு அம்பத்தூர், ஆவடி பகுதி சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே மாவட்ட துணைத் தலைவர் சு.பால்சாமி தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொருளாளர் ம.பூபாலன், மாவட்ட நிர்வாகிகள் கே.ரவிச்சந்திரன், ஜி.குணசேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எல்.பி.சரவணத்தமிழன், கே.சீனிவாசன், ஜெ.ரவி, அ.ராயப்பன், நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கே.கே.நகரில் போதைப் பொருள் விற்பனை: 5 பேர் கைது சென்னை, டிச. 24– கே.கே.நகர் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் கே.கே.நகர் காவல்துறையினர் கே.கே.நகர், முனுசாமி சாலை, ஆர்டிஓ மைதானம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், போதைப்பொருள் வைத்திருந்த அரவிந்த், முகிலன், கிறிஸ்டோபார், குணசந்திரன் மனோஜ் ஆகிய பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7.04 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன், 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். ஏர்பஸ் நிறுவனத்துக்கு உதிரிபாகங்கள், இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் சென்னை,டிச.24- விமான உதிரி பாகங்கள் மற்றும் விண்வெளி உபகரணங்களை ஏர்பஸ் நிறுவனத்திற்கு வழங்க இந்தியாவின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனமான ரான்சன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஒரு நீண்ட கால ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. ரான்சன்ஸ் நிறுவனம் திரவ விநியோகம், தகவல் தொடர்பு மற்றும் வானிலை மேலாண்மை போன்ற அமைப்புக்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது. இந்த ஒப்பந்தம் மூலம், மிகத் துல்லியமான விமான உதிரிபாகங்கள் மற்றும் நவீன விண்வெளி அமைப்புகளைத் தயாரிப்பதில், உலக அளவில் ஒரு நம்பிக்கையான நிறுவனம் என்ற இடத்தை ரான்சன்ஸ் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், ஏர்பஸ் நிறுவனத்தின் ஏரோஸ்ட்ரக்சர்ஸ் கொள்முதல் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஆலிவர் காகில் மற்றும் ரான்சன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் ரங்கா ஆகியோர் கையெழுத்திட்டனர். இரு நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தக உறவில் இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செங்கல்பட்டு, டிச.24- செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கடப்பேரி ஏரிக்கரை பகுதியில் உள்ள காலி இடத்தில் கஞ்சா செடி வளர்க்கப் படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏரிக்கரை பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு 5 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதை கண்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் கஞ்சா செடிகளை கைப்பற்றப்பட்டது. விசாரணையில் ஒழலூர் பீடி நகர் பகுதியை சேர்ந்த சல்மான், 29.என்பவர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த கலால் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.