52-ஆவது நினைவு தினம்: தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை!
சென்னை, டிச. 24- தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாள், புதன்கிழமையன்று நினைவு கூரப்பட்டது. இதையொட்டி பெரியாரின் சிலை மற்றும் அவரது உருவப்படத்துக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சென்னை ஓமந்தூரார் சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பெரியார் திரு வுருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ சமூகவலைதள பதிவில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்” என குறிப்பிட்டிருந்தார். “தமிழர்கள் தலை குனியாமல், ஆதிக்கத்துக்கு அடிபணி யாமல், பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி” என தெரிவித்திருந்தார். மேலும், “பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல், தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங் களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே!” எனவும் முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.