மாசக் கடைசி
என் அப்பாவின் மணிபர்ஸ்
இரட்டைக் கிளவி.
பிரித்துப் பார்த்தேன்
பொருள் இல்லை
….
பொய் அழகு
‘மழையில் நனையப் பிடிக்கும்’
என்ற உன் கவிதையைப்
படித்ததும்தான் நினைவு வந்தது
இரவல் வாங்கிப் போய்
இன்னும் நீ தராத குடை.
….
சாபவிமோசனம்
தம்புசாமி தூக்கில் தொங்கியபோது
தலைகுனிந்த மரம்
சந்தோசத்தில் நிமிர்கிறது
வீரலட்சுமி, அதில் தூளி கட்டி
தன் குழந்தையைத் தாலாட்டும்போது.
….
பிறப்புரிமை
வேளைக்கு உணவும்
பாதுகாப்பும் பராமரிப்பும்
இருந்தென்ன…
தொட்டி மீன்கள் ஏங்குவது
வலையும் தூண்டிலும்
சுறாவும் ஆபத்தும் உள்ள
கடலுக்குத்தான்.