இசையே கொஞ்சம்
வெளியே நில்.
கருவறைக்குள்
உனக்கும் இடமில்லை.
உனது தலையில்
பல கீதம் பிறந்திருக்கலாம்
நீ தலையில் பிறக்கவில்லையே?
இசைக்கடவுள் நீயென
கர்வம் இருக்கலாம்.
என் கடவுளை தரிசிக்க
உள்ளே அனுமதியில்லை.
உன் திறத்தால்
நீ உயர்ந்தவனாய் இருக்கலாம்.
பிறப்பால் எங்களுக்கு
நீ உயர்ந்தவன் இல்லை.
எதற்கும் கொஞ்சம்
தள்ளி நின்றே பாடுங்கள்
காற்றில் வரும் இசை
கருவறைக்குள் சென்றுவிட போகிறது.