tamilnadu

img

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவியருக்கும் இனி மாதம் ரூ. 1000

சென்னை, டிச. 30 - 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது, இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி சேரும் மாணவியர்க்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில், திங்களன்று  நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு அட்டைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்விக்கு செல்வது குறைவாக இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை நான் பார்த்தேன். அதில், மேல்படிப்பு படிக்க திறமையும், மனசும் இருந்தாலும் பணம் இல்லாததாலேயே படிப்பை கைவிடுகிறார்கள் என்பதை தெரிந்து வருத்தமடைந்தேன். அப்போதுதான், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் எனும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கினேன். தற்போது, அரசுப் பள்ளிகளில், ஆறாம்  வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை  படித்து, மேற்படிப்பு சேரும், அனைத்து  மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1000  ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கு களிலேயே நேரடியாக செலுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. இது 2021 தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத திட்டம். இது பெரும் அளவில் தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்டிய தேவையுள்ள திட்டம். புதுமைப்பெண் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே இப்போது வரைக்கும் கலை அறிவியல், பொறி யியல், தொழிற்படிப்பு, மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உட்பட சுமார் 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவியர் பயனடைந்திருக்கின்றனர். இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக 590 கோடியே 66 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதை  அரசுக்கு செலவு ஏற்படுத்தும் திட்டமாக கருதாமல், ஒரு தந்தைக்குரிய கடமை யாக பெண் குழந்தைகளின் கல்விக் கான மூலதனமாக தான் நான் பார்க்கிறேன். சில நாட்களுக்கு முன்பு படித்த அறிக்கை ஒன்றில், இந்த திட்டத்தின் காரணமாக, கல்லூரிகளில் மாண வர்கள் கூடுதலாக சேரத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிற விவரம் அந்த அறிக்கையில் இருந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.” என்று தெரிவித்தார். முதல்வரின், இந்த புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம் தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 028 மாணவி யரும் இனி மாதம் 1,000 ரூபாய் பெறுவார்கள்.