கொக்கும் காகமும்
“படபட”வென சிறகை அடித்த வாறு, ஒரு வடையை அலகில் கொத்திக் கொண்டு குளக்கரை யில் உள்ள வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்தது காக்கா. குளத்தில் தான் சாப்பிடுவதற்கு மீன்கள் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது கொக்கு. மரத்தில் வந்து உட்கார்ந்த காகத்தைப் பார்த்து “ என்ன காக்கா அண்ணே, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறீங்க? “என்று கேட்டது கொக்கு. “ஆமாம்! பாட்டி இப்போதுதான் வடை சுட்டு சட்டியில் போட்டாங்க. நான் அதைப் பாட்டிக்குத் தெரியாமல் எடுத்துட்டு பறந்து ஓடி வந்துட்டேன்.இப்போ சாப்பிடப் போறேன்”. வடையைச் சாப்பிட்டுக் கொண்டே “என்ன கொக்கு தம்பி, உனக்கு இன்னும் மீன் கிடைக்கலையா?உன்னைப் பார்த்தால் பாவமா இருக்கு. கொஞ்சம் வடை சாப்பிடறயா?” என்றது காகம். “வேணாம் அண்ணே “ காக்கா தொடர்ந்து பேசியது, “கொக்கு தம்பி,உனக்கு சாமர்த்தியமே இல்ல. அங்க பாரு ஒரு ஆள் வலையில மீன் பிடிச்சு கூடையில் எடுத்துப் போட்டுகிட்டு இருக்கார். நீ அங்கே போய் அதுல ரெண்டு மீன அவருக்குத் தெரியாம தூக்கிட்டு ஓடிவா!’ என்று சொல்லிவிட்டு பறந்து போனது. இரண்டு நாட்களுக்குப் பிறகு காகம் சோகமாக வேப்ப மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த கொக்கு” காக்கா அண்ணே!ஏன் சோகமா இருக்கீங்க?”எனக் கேட்டது என்னத்தச் சொல்ல? இன்னைக்கும் பாட்டிகிட்ட இருந்து வடையைத் திருட லாம்னு போனேன். அப்போ பாட்டியோட பேரன் ஓடி வந்து என் முதுகில் தடியால அடிச்சிட்டான். நான் உயிர் தப்பிச்சு வந்தததே பெரிய சாதனையாப் போச்சு “என்று சொன்னது. உடனே கொக்கு “அண்ணே, நான் ஒரு விஷயம் சொல்றேன். தப்பா நினைச்சுக் காத.எப்பவுமே நமக்கு வேணுங்கறத நாம உழைச்சு தான் சாப்பிடணும். நீ பாட்டிய ஏமாத்தித் திருடப் போனதுதால தான் அடிவாங்கிட்டு வந்திருக்க” என்றது. மேலும் “என்னைப் பார்! ரொம்ப நேரம் இந்த சகதியிலும் தண்ணியிலும் கால் வலிக்க காத்திருக்கிறேன். எனக்குத் தேவை யான மீன் வந்த பிறகு அதைக் கொத்திச் சாப்பிடறேன்” என்று சொல்லிவிட்டு மீனை அலகில் பிடித்த படியே பறந்து போனது. சிறிது நேரம் கொக்கு போன திசையை யே பார்த்துக் கொண்டிருந்த காகம் தனக்கான சாப்பாட்டைத் தேடிப் பறந்து சென்றது.
