தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாக கெடுக்க முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு
ஈரோடு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
ஈரோடு, நவ. 26 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நவம்பர் 26 புதனன்று ஈரோடு மாவட்டத்தில் நடை பெற்ற மாபெரும் அரசு விழாவில், ₹605 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பொதுமக்களுக்கு அர்ப்பணித்த பின்னர் ஆற்றிய உரையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகள் மீது கடும் அரசியல் தாக்குதலைத் தொடுத்தார். தமிழக ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டைத் திமிராகப் பேசி வருவதாகவும், அதனை அடக்க
வேண்டும் என்றும் அவர் சூளுரைத்தார். ‘தீவிரவாத மாநிலமா’ தமிழ்நாடு?
ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில், தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சனை கள் இருப்பதாகவும், இது தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக இருப்பதாக வும் பேசியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வன்மையான கண்டனம் தெரிவித்தார். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை, இழிவுபடுத்தும் விதமாக ஆளுநர் பேசியதை அவர் “திமிர்” என்று சாடினார். “தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதைத் தடுக்க முடியாத பாஜக ஆட்சியைப் புகழ்ந்து பேசுகின்ற ஆளுநர், தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார். அவருடைய திமிரை அடக்க வேண்டும்” என்று முழங்கினார். இக்கட்டான சூழல்களில் தேசப்பற்றுடன் படைவீரர் களுக்கு நிதியுதவி வழங்கும் தமிழர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் ஆளுநரின் பேச்சு அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்றது என்றும் விமர்சித்தார். மேலும், தமிழ்மொழி வளர்ச்சி குறித்தும் ஆங்கிலக் கல்வி குறித்தும் ஆளுநர் கருத்து தெரிவித்ததற்கு பதிலளித்த முதலமைச்சர், “எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள்; அதில் உங்க ளுக்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு எங்கே எரிகிறது?” என்று கேள்வி எழுப்பினார். தாய்மொழிப் பற்று பற்றித் தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை என்றும், “அந்தப் பாடத்தில் பி.எச்.டி. வாங்கியவர்கள் நாங்கள்” என்றும் ஆவேசமாகப் பேசி னார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட கலைஞர் பெயரிலான பல்கலைக் கழக மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் ‘மாணவர்களின் நலனில் விளையாடுவது’ என விமர்சனம் செய்தார்.
பாஜக அரசின் தொடரும் துரோகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டைக் குறிவைத்துச் செயல் படுவதாகக் குற்றம் சாட்டினார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 2011 மக்கள்தொகையைக் காரணம் காட்டி ஒன்றிய அரசு நிராக ரித்தது, பாஜகவின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என விமர்சித் தார். “பாஜகவுக்கு வாக்களிக்காத தமிழ்நாடு எதைக் கேட்டாலும் தரக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறது பாஜக” என்று சாடினார். அதேபோல், நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ கத்தின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சு.வெங்கடேசன் எம்.பி., குறிப்பிட்ட விபரம்
மேலும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரயில்வே நிதி ஒதுக்கீடு குறித்த விவ ரங்களையும் அவர் உரையில் குறிப்பிட்டார். அவ்விவரங்களின்படி, 2024-25 நிதியாண்டில் புதிய ரயில்வே வழித்தடங்களுக்காக நாடு முழுவதும் ₹31,458 கோடி ஒதுக்கப்பட்ட நிலை யில், தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் ₹301 கோடி மட்டுமே ஆகும். இது மொத்த ஒதுக்கீட்டில் தோராயமாக ஒரே ஒரு பர்சென்ட் (1%) மட்டுமே என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “வரி வசூ லிக்க மட்டும் தமிழ்நாடு; நிதி ஒதுக்கீட்டில் பட்டை நாமத்தை போடுகிறது பாஜக-வின் ஆட்சி!” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி னார். இந்த அரசியல் லாபங்களுக் காகப் பொதுமக்களைப் பழிவாங்கும் “அற்ப அரசியல்தான்” தமிழ்நாட்டில் பாஜகவுக்குத் தொடர் தோல்வியை அளித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவின் துரோக அரசியல்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதலமைச்சர், பழனிசாமியின் ஆட்சி மேற்கு மண்ட லத்திற்குக் கூட துரோகம் மட்டுமே செய்திருப்பதாகவும், நெல் கொள்முதல் விவகாரத்தில் உண்மையான விவசாயியாக இருந்தால் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்திருப்பார் என்றும் குறிப்பிட்டார். பழனிசாமியின் துரோக அரசியல்தான் அவருக்கு “பத்து தோல்வி பழனிசாமி” என்ற பட்டப்பெயரைப் பெற்றுத் தந்திருப்பதாக விமர்சித்தார். இந்தத் தடைகள் மற்றும் தொல்லை களைக் கடந்து திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், மகளிருக்கான ₹1,000 உரிமைத் தொகை திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் மீதான எங்களின் உண்மையான அக்கறையும், மாநில உரிமைக்கான போராட்டமும்தான் திமுகவுக்குத் தொடர் வெற்றியை அளித்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், மக்கள் அனை வரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.
