எந்த ஞானமும் இல்லாத ஆளுநர் ரவி! ஆங்கிலேயர்களின் அடிவருடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர் மார்க்சைப் பற்றிப் பேச அருகதை இல்லை!
சிபிஎம் கடும் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; மார்க்ஸ் மட்டுமல்ல; எந்தவொரு மாமனிதரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதே மார்க்சியர்களின் நிலைபாடு. ஆனால், அதற்கு விமர்சிக்கப்படுபவர்கள் குறித்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். சில பெயர்களை மட்டும் தெரிந்து கொண்டு அவற்றின் மீது தான் கரை கண்டவர் போல, வரலாற்று அறிஞர்களே திடுக்கிடும் வகையில் அவதூறுகளை அள்ளிவீசுவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம். வள்ளலார், அய்யா வைகுண்டர், திருவள்ளுவர், தமிழ்நாட்டின் பெயர் என்று எல்லாவற்றிலும் கரை கண்டவர் போல வாய்க்கு வந்ததைப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இப்போது தோழர் காரல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியர்கள் மீது ஆளுநர் மாளிகைக்குள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவதூறு மழை பொழிந்திருக்கிறார்.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதியது என்ன?
1853ல் தி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியாவைப் பற்றி தோழர் காரல் மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்த கட்டுரைகளில் இந்தியாவில் அப்போது நிலவி வந்த சுயதேவை பூர்த்தி கிராமங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்ததை சுட்டிக்காட்டி ஆங்கிலேயர்கள் தங்களது சுரண்டும் நோக்கிலிருந்து அதை மாற்றியதை அதன் மூலமாக உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்ததைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதே சமயம், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தொழில்களை அழித்ததையும், இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றதையும், கந்துவட்டி வரிவிதிப்பு முறைகளையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர் எப்போதும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்ததையும், சுரண்டிக் கொழுத்ததையும் ஆதரித்து எழுதவில்லை. ஆனால், அன்னை நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போதும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருக்க அவதாரம் எடுத்தது போல் செயல்பட்ட ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி காலனியாதிக்கத்தை கடுமையாக எதிர்த்த காரல் மார்க்சை அவதூறு செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
ஆம், எதிரானவர்கள் தான்!
அதேபோன்று, மார்க்சியர்கள் இந்தியாவின் நாகரீகத்தைப் பற்றி பெருமைப்பட வில்லை, சிறுமைப்படுத்தினார்கள் என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார். இந்த கூட்டம் தான் தமிழ்நாட்டில் கீழடியின் தொன்மையை மறுத்து இன்று வரை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தி யிருக்கும் ஸ்மிருதியை உருவாக்கிய மனுவை பகவான் என்று கொண்டாடும் கூட்டம் இது. நால் வர்ணமும், தீண்டாமையும் அறிவும் ஒருசாராருக்கே உரியது என்ற அடிமுட்டாள் தனத்தையும் கொண்டாடுவதை நாகரீகம் என்றால் அதற்கு எதிரானவர்கள் மார்க்சியர்கள். ஒருபக்கம் பெண்ணை தெய்வம் என்று போற்றுவது போல் நடிப்பதும் மறுபக்கம் பெண் என்றாலே இழிவானவள் என்றும்; குழந்தையாய் இருக்கும் போது தகப்பனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பிறகு கணவனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; வயதான பிறகு மகனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மூடத்தனத்தை விதைக்கும் ஸ்மிருதியை நாகரீகம் என்று ஒரு கூட்டம் கொண்டாடும் என்றால் அதை எதிர்த்து நிற்பது மார்க்சியர்களின் கடமை. குழந்தை திருமணம், கைம்பெண் மறுமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் - இவற்றையெல்லாம் நாகரீகம் என்று சொன்னால் அதை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பது தான் மார்க்சியர்களின் தலையாய கடமை.
ஆளுநர் என்பதாலே வல்லவரா?
பாரம்பரியத்தின் மகத்தான முற்போக்கு விழுமியங்களைக் கொண்டாடி குதூகலிக்கும் அதே நேரத்தில், மனித மாண்புகளை சிதைப்பவை புதியதோ, பழையதோ தொன்மையானதோ, நவீன காலத்ததோ அதை எதிர்த்துச் சமர் புரிவதை சபதமாக ஏற்றி ருக்கிறோம். எந்த ஞானமும் இல்லாமல் ஆர்.என்.ரவி தோழர் காரல் மார்க்சையும், மார்க்சியத்தையும் அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது. ஆளுநர் தகுதிக்கே பொருத்தமற்றவர் என்கிற காரணத்தினால்தான் நாகலாந்தி லிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆளுநர் ஆகிவிட்டதாலேயே அனைத்து துறையிலும் வல்லுநர் என கருதிக்கொண்டு உயரத்திற்கு பொருத்தமின்றி ஆர்.என்.ரவி குதித்ததால் தமிழ், தமிழ்நாடு உள்ளிட்ட அம்சங்களில் அறிவுத் தளத்தில் அடி வாங்கியது போல தமிழக மக்கள் உரிய முறையில் திருப்பிக் கொடுப்பார்கள். இனியேனும் தன் உயரத்திற்கு தகுந்தார் போல் குதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.