எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
சென்னை, நவ.26 - அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த செப்.5 ஆம் தேதி, அதிமுக வலிமை பெற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய செங்கோட்டை யன் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். அதன் பிறகு அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இந்நிலையில், புதன்கிழமை சட்டப்பேரவை செய லகத்திற்கு வந்த செங்கோட்டையன் பேரவை தலைவர் மு.அப்பாவை சந்தித்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியில் வந்த செங்கோட்டையனிடம் பத்திரிகையாளர்கள் பலரும் திமுகவா? தவெகவா? என்ற கேள்வியை எழுப்ப, அவர் எந்த பதிலும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார். விஜய் - செங்கோட்டையன் சந்திப்பு இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வந்துள்ளார். விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்திய செங்கோட்டையன் வியாழனன்று (நவ.27) அதிகாரப்பூர்வமாக விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.