62 நாள் இயக்கத்தால் இன்று வெற்றி கிடைத்துள்ளது ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமே தொழிலாளி வர்க்கம் சாதிக்க முடியும்! போக்குவரத்து ஓய்வுபெற்றோர் மாநாட்டில் கே. ஆறுமுகநயினார் பேச்சு
மதுரை, பிப். 21 - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர் நல அமைப்புகளின் சம்மேளன மாநில அமைப்பு மாநாடு, மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டைத் துவக்கி வைத்து, சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார் பேசியதாவது: அரசுத் துறையிலிருந்து கழகத் தொழிலா ளர்களாக மாறிய போக்குவரத்து ஊழியர்களுக்கு 55 வயதே ஓய்வு வயதாக இருந்த நிலையில், சட்டப் போராட்டம் நடத்தினோம். அதன் பலனாக ஓய்வு வயது 55 இலிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. இந்த வெற்றியே பின்னர் அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் என்று அனைத்துத்தரப்பு அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்விற்கும் வழி காட்டியாக அமைந்தது. சட்டம் காக்கப் போராடிய “மாயாண்டி” வழக்கு நகரப் பேருந்துகளில் சட்டப்படி நிர்ணயிக்கப் பட்ட கொள்ளளவை மீறி பயணிகளை ஏற்றக்கூடாது என்ற முடிவை சிஐடியு சங்கம் எடுத்தது. அதை நடைமுறைப்படுத்திய மாயாண்டி, நிற்கும் பய ணிகளுக்கு டிக்கெட் வழங்க மறுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த பணிநீக்கத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் தெளி வாகக் கூறியது – மோட்டார் வாகனச் சட்டப்படி கொள்ளளவை மீறுவது தவறு. சட்டவிரோத உத்த ரவை பின்பற்ற மறுத்ததற்காக ஒருவரை நீக்கு வது தவறு. மேல்முறையீடுகள் சென்ற பின்னரும், இறுதியில் உச்ச நீதிமன்றம் வரை நமக்கே நீதி கிடைத்தது. பின்னர், “கலெக்ஷன் பேட்டா”வை அறிமுகப்படுத்தப்பட்டு தொழிலாளர்களுக்கு நன்மை கிடைத்தது. ஓய்வூதியப் போராட்டம் – தொடரும் பொறுப்பு நமது போராட்டம் ஓய்வு வயதில் முடிவடைய வில்லை. ஓய்வூதிய உரிமைகளிலும் தொடர்ந் தது. ஓய்வூதியத்தை அரசே நேரடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தனி டிரஸ்ட் முறைக்கு மாற்றக்கூடாது. அகவிலைப்படி (டி.ஏ) உடனுக்கு டன் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதிய விதி களில் தெளிவு தேவை. திட்ட நிர்வாகத்தில் தொழி லாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். 2012ஆம் ஆண்டிலேயே டி.ஏ வழங்க வேண்டும் என்ற கோரிக் கையுடன் வழக்கு தொடரப்பட்டது. 2018ஆம் ஆண்டிலும் வழக்குகள் தொடரப்பட்டன. அனைத் தும் சம்மேளன ஆலோசனையுடன் முன்னெடுக் கப்பட்டன. ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நேரடியாக பங்கேற்கும் வகையில் தனி ஓய்வுபெற்றோர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு நலச்சங்கம் அல்ல உரிமைக்கான போராட்ட அமைப்பு. “நடு நிலை” என்ற பெயரில் அமைதியாக இருப்பது தொழிலாளருக்கு தீங்கு விளைவிக்கும். உரிமைக் காக அரசியல் நிலைப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அமைப்பு வளர்க்கப்பட்டது. 62 நாள் காத்திருப்பு போராட்டம்– புதிய வெற்றி சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 62 நாட்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடி பணப் பலன்கள் கிடைக்கப் போகின்றன. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கும் உடனடியாக பணம் வழங்கப்பட உள்ளது. இது நமது கூட்டு போராட்டத்தின் பெரிய வெற்றி. இதைப் பார்த்து உள்ளாட்சிப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், டாஸ்மாக் பணியாளர் கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலரும் தொடர் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். போராட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் முன் மாதிரியாக உள்ளனர். ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைக்கும் ஓய்வூதியம் வேண்டும் என்று போராடி உரு வாக்கியது பணியில் இருந்த தொழிலாளி. இன்று அதை பாதுகாக்க வேண்டியது பணியில் உள்ளவர் களும், ஓய்வு பெற்றவர்களும் இணைந்தே செய்ய வேண்டிய பொறுப்பு. கடந்த 7 ஆண்டுகளாக நாம் ஒன்றாக இணைந்து போராடி வருகிறோம். இந்த ஒற்றுமை தொடர்ந்தால் மற்ற கோரிக்கைகளி லும் நிச்சயம் வெற்றி பெறுவோம். பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற தொழிலா ளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பு களின் சம்மேளனமும் எப்போதும் இணைந்து செயல் படும். இவ்வாறு ஆறுமுகநயினார் பேசினார்.
