tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆசிரியர் தினம்:   முதல்வர் வாழ்த்து

சென்னை, செப். 5 - ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “குழந்தைகளை அன்புள்ள, அறிவுள்ள, சமூக அக்கறையுள்ள மனிதர்களாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவதை நினைவுபடுத்திய முதல்வர், மாணவர்களின் உயர்வுக்காக பாடுபடும் நல்லாசிரியர்களுக்கு தனது  நல்வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை அணிவகுப்பு புதிய நெறிமுறை

சென்னை, செப். 5 - அரசு நிகழ்வுகளுக்காக வரும் 7 முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். இதன்படி குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஆளுநர், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு மட்டுமே காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவில் ஒரே நாளில் ரூ. 274 கோடி வருவாய்

சென்னை, செப்.5-
பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வியாழனன்று ஒரே நாளில் ரூ. 274 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், “பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4) கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்மூலம், பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழும் 2025-26ஆம் நிதியாண்டில், ஒரே நாளில் அரசுக்கு ரூ. 274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டு, பதிவுத்துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.