articles

img

வரதட்சணை அற்ற தமிழகம் கனவிலிருந்து நனவுக்கு - எஸ் வாலண்டினா

வரதட்சணை அற்ற தமிழகம் கனவிலிருந்து நனவுக்கு

திருமணம் என்பது அன்பில் இரு மனங்களின் பொருத்தத்தில் வாழ்நாள் முழுவதும் வாழ்க்கை இணையராக வாழ்வதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய  நிலையில் திருமணங்கள் நகைகள், சீதனப் பொருட்கள், பணம், சொத்து ஆகியவற்றின் அளவீடுகளைப் பொறுத்தே பெண் பார்க்கும் படலங்கள் துவங்குகின்றன.  மனநிறைவோடு இணைய வேண்டிய இரு மனங்களும் ஆடம்பரமான திருமண மண்டபங்களில் வைத்துள்ள சீதனப் பொருட்களை அலங்காரமாக காட்சிப்படுத்தி, “மற்றவர்களை விட எனக்கு வந்த சீதனங்களும் நகைகளும் வரதட்சணைகளும் அதிகம்” என்று மார்தட்டிக் கொள்வதில் பெருமை கொள்ளும் அளவிற்கு உள்ளது. இவற்றால் ஏராளமான தற்கொலைகளிலும் வரதட்சணை கொலைகளிலும் முடிந்துகொண்டுள்ளன பல திருமணங்கள். மணமுறிவுகளில் முடிவதால் தனித்து வாழும் பெண்களாக பலர் மாற்றப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் உண்மைகள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின்  புள்ளிவிவரங்களின்படி கடந்த பன்னிரண்டு வருடங்களில் வரதட்சணை கொலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. மொத்தம் 96,202 வரதட்சணை கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் 84,013 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5,801 வழக்குகள் பொய்யானவை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 44,668 வழக்குகளில் மட்டும் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது - இது வெறும் நாற்பத்தெட்டு சதவீதம் மட்டுமே. காவல்துறையின் அலட்சியப் போக்கும், ஆர்.டி.ஓ. விசாரணையில் தாமதமும், நீதித்துறையில் பல ஆண்டுகளாக வழக்குகள் தேங்கியுள்ளதும் போன்ற பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆகிறது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதாகும். இந்திய குற்றப்பிரிவு ஆவண அமைப்பின் அறிக்கைப்படி உலகிலேயே இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பது வெட்கக்கேடான உண்மை. வரலாறு சொல்லும் உண்மை புராதன பொதுவுடமை சமுதாயத்தில் வரதட்சணை என்பதே இல்லை. சங்க இலக்கிய காலங்களில் பெரிய அளவுக்கு வரதட்சணை இல்லை என்று வரலாற்று ஆய்வுகள் தெளிவாக கூறுகின்றன. பணம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பெருமைப்படக்கூடிய வகையில் சீதனங்கள் செய்வது என துவங்கிய இந்த கொடூரமான பழக்கம், இன்றைக்கு ஏழை பணக்காரர் என இல்லாமல் அனைத்து பிரிவு மக்களையும் பாதித்து வருகிறது. இதனால் பெண் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கே பெற்றோர்கள் அச்சப்படக்கூடிய மோசமான சூழ்நிலை இருக்கிறது. தமிழகத்தின் கொடூர நிலை தற்போது தங்கம் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கும் சூழ்நிலையில், கடந்த மூன்று மாத காலத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட வரதட்சணை கொலைகள் தமிழகத்தில் நடந்தேறியுள்ளன. இந்த படுகொலைகள் கூறுவது, மணமகன் வீட்டார் திருமணமான பெண்ணின் வீட்டிலிருந்து எவ்வளவு முடியுமோ அதை பெறுவதில் மிகக் கவனமாக இருப்பதையே வெளிப்படுத்துகிறது. திருப்பூர் அவினாசி ரிதன்யாவின் மரண வாக்குமூல ஒலிப்பதிவு குரல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மாமியார், தனது மருமகளுக்கு எச்.ஐ.வி. ஊசி போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்த கொடூரம் நடந்தது. சில இடங்களில் அமிலத்தை முகத்தில் வீசி பாதிக்கப்பட்ட பெண்கள் இச்சமூகத்தில் வாழ்வதற்கே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றத்தின் வழிகள் மணமகனின் பெற்றவர்கள் தன்மகனை படிக்க வைத்து ஆளாக்கி வேலைக்கு செல்ல வைத்து சொந்த காலில் நின்று தன் மருமகளை பாதுகாக்க வேண்டும் என்ற உந்துசக்தியை, தைரியத்தை கொடுத்து வளர்ப்பதற்கு பதிலாக சோம்பேறிகளாக உட்கார்ந்து மனைவியின் சொத்திலே சாப்பிட்டுக்கொண்டு அவளை பலவீனப்படுத்துகிற வார்த்தைகளால் உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு இருக்கும் இளைஞர்களின் மனநிலையில் பாலின சமத்துவத்தைச் சொல்லிக் கொடுப்பதும், ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைப்பது, சம்பாதிப்பது, இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ்க்கை நடத்துவது என்று சொல்லிக் கொடுப்பது மிக அவசியமானது. அரசின் கடமை தமிழக அரசாங்கம் ஏற்கனவே இருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். அதை அமல்படுத்த தவறுகிற காவல்துறை அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதித்துறையில் இருப்பவர்கள் வரதட்சணை கொலை மற்றும் கொடுமை வழக்குகள் வரும்போது உடனுக்குடன் தீர்வு காணக்கூடிய வகையில் வழக்குகளை துரிதப்படுத்தி நடத்த வேண்டும். வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டங்கள், தண்டனைகள் குறித்து அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில், தொலைத்தொடர்பு சாதனங்களில் கூடுதலாக வெளியிடுவதன் மூலமாக வரதட்சணை கொலைகளை, தற்கொலைகளை, கொடுமைகளை தடுக்க முடியும். குடும்பங்களின் பங்கு மணமகனை பெற்றவர்கள் தங்கள் குடும்பத்தில் மகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். தன் மகளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமைய வேண்டும் என்று நம் மனநிலையில் நினைக்கிறோமோ அதே நிலையில் தான் நம் வீட்டிற்கு வரும் மருமகளின் பெற்றோர்களும் நினைப்பார்கள் என்று மணமகனை பெற்றவர்களும் கருத வேண்டும். மருமகளை மகளாக பாவிக்கிற நிலைக்கு மணமகன் குடும்பம் மாறுகிற பொழுதுதான் இந்த கொடுமைக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்க முடியும். பெண்ணை பெற்றவர்களும் அழகு, வீடு, கார், சொகுசு வாழ்க்கை இவற்றை மட்டும் பார்க்காமல் மணமகன் தன்மகளை சக மனுசியாக பார்த்துக் கொள்வானா, இந்த குடும்பம் அவளுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்று விசாரித்து முடிவுக்கு வர வேண்டும். பொன்னான எதிர்காலம் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். பெண்ணையும் ஆணையும் பார்த்து இருவரும் கலந்து பேசி பிடித்திருந்தால், கடைசி வரை இணைந்து பயணிக்க முடியும் என்று நினைத்தால் திருமண வாழ்க்கைக்கு செல்வது என்ற நிலை இருக்கும்போது அவர்களிடம் வரதட்சணைக்கு எந்தவிதமான இடமும் இருக்காது. அவர்களுடைய பிள்ளைகளுக்கும் அப்படிப்பட்ட நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து வாழ்க்கை துணைகளை தேர்ந்தெடுக்க வைத்தால் வரதட்சணை கொலைகள் அற்ற மிகச் சிறப்பான  ஒரு சமுதாயமாக தமிழ்ச் சமூகம் மாறும். பிறந்தது பெண் குழந்தையா என்று வேதனைப்படாமல் மகிழ்ச்சியோடு தன் மகளை வாரி அணைத்து முத்தமிட்டு “சமூகத்தில் உனக்கு பாதுகாப்பு இருக்கிறது, இந்த மண்ணிற்கு வா” என்று தைரியம் கொடுக்கும் அன்பு பெற்றோர்களாக நாம் மாறும்போது வரதட்சணையற்ற  தமிழகமாக உருவாக்க முடியும். மணமகனின் குணத்தையும் குடும்பத்தில் உள்ளவர்களின் பண்புகளையும் அவர்களின் செயல்பாடுகளையும் பார்த்து மதிப்பிட்டு திருமணம் செய்து வைப்பது சாலச் சிறந்தது. அதுவே எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை நம் மகளுக்கும் மகனுக்கும் கொடுக்கும்.