மகள் புகார் செய்தால் தயங்காமல் தலையிடுங்கள்
வரதட்சணை இறப்புகள் இந்தியாவில் நம் சமூகக் கட்டமைப்பில் ஆழ்ந்த சோகமான, சிக்கலான பிரச்சினைகளை உணர்த்துகின்றன. பல நூற்றாண்டுகள் பழமையான சமூக விதிமுறைகள், பாலின சார்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களில் வேரூன்றி இருக்கின்றன இப்பிரச்சனைகளுக்கான துவக்கப் புள்ளிகள். புகார் அளிக்க தயக்கம் வரதட்சணையை தடுப்பதற்காக தற்போதைய சட்டங்கள் என்ன? வரதட்சணை தடைச் சட்டம் (1961), ஐபிசி பிரிவுகள் 498 ஏ (கணவர்/மாமியார் கொடுமை) மற்றும் 304 பி (வரதட்சணை இறப்புகள்), சட்டவிரோத வரதட்சணை மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளை கடுமையான தண்டனையுடன் தண்டித்தல், ஆயுள் தண்டனை உட்பட முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இருக்கின்றன. 2025இல் கேரளாவில் இயற்றப்பட்ட இன்னும் புதிய சட்டங்கள், வரதட்சணை கொடுப்பதை மறுக்க அறிவுறுத்துகின்றன; அதே நேரத்தில் வரதட்சணை கோருவோருக்கும் பெறுபவர்களுக்கும் அபராதங்களை அதிகரித்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகும் வரதட்சணை கேட்பவர்களை குற்றவாளியாக்குவதற்கான ஒரு புதிய ஏற்பாட்டையும் இது அறிமுகப்படுத்துகிறது. மேலும் வரதட்சணையைத் திருப்பித் தருவதற்கும் இழப்பீடு வழங்குவதற்கும் காலக்கெடுவை நீட்டிக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் செயல்படுத்துவதில் இடைவெளி இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. வலுவான சட்டங்கள் இருந்தபோதிலும், அமலாக்கம் மிகவும் பலவீனமாகத்தான் உள்ளது - தண்டனை விகிதங்கள் குறைவாக உள்ளன. ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலபேர் அல்லது அவர்களது குடும்பங்கள் சமூக களங்கம் என்று எண்ணி புகார் செய்வதற்கு அஞ்சுகிறார்கள். இதிலிருந்து அப்படிப்பட்ட களங்கத்தை பொருட்படுத்தாமையும், சட்ட கட்டமைப்பையும் அமலாக்கத்தையும் வலுப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது தெளிவாகிறது. வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்து, வரதட்சணை தொடர்பான புகார் செய்வதற்காக குடும்பங்கள் முன் வர வேண்டும். போலீஸ் அதற்கான சுமூகமான சூழலை உருவாக்கவேண்டும். துணிச்சலாக நிராகரியுங்கள் கலாச்சார விதிமுறைகள், வரதட்சணை வழங்குவது தம் அந்தஸ்துக்கு சமமானதாக இருக்கும் என்ற மனநிலையை மாற்றவேண்டும். குறிப்பாக வசதியான குடும்பங்களிடையே தான் இந்த போக்கு அதிகமாக உள்ளதைப் பார்க்கிறோம்.“500 பவுனு நகையைப் போட்டு என் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தேன்” என்று ஜம்பம் பேசுவதைப் பார்க்கிறோம். அவர்களிடம் “நல்ல குடும்பம்” என்பது வரதட்சணை அளிப்பதிலல்ல, மகளை மதிப்பதில் இருக்கிறது என்பதை வலியுறுத்துவதைச் செய்யவேண்டும். வரதட்சணையை வலியுறுத்தும் திருமணங்களை நிராகரித்தல் அதிகரித்தால் ஒரு மாற்றத்தை நாம் பார்க்கலாம் என்பதை உணரவைக்கவேண்டும். காலங்காலமாக தொடரும் தவறான மரபுகளை, மற்றும் கௌரவத்தின் பொய் மதிப்புகளை கேள்வி கேட்டு; அவற்றிற்காக பெண்ணைப் பலியிடுவதன் அவசியத்தை தகர்ப்பதும்; ஆண் பெண் சமத்துவத்தை சாத்தியப்படுத்துவதற்கான சூழலும் ஏற்படுமேயானால் இந்நிலை கண்டிப்பாக மாறும். என்ன செய்ய வேண்டும்? முக்கியமாக வரதட்சணை கேட்கிறவர்கள் மத்தியிலும் சமூக விழிப்புணர்வு மற்றும் கலாச்சார மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும் என நாம் சிந்தித்து செயல்படவேண்டிய கட்டாயமான காலம் இது. அதற்கான ஆக்கப்பூர்வமான சில வழிமுறைகள்: காலத்தின்கட்டாயமாக, புதிய வடிவங்களில் இப்பிரச்சனையை அணுகிட விழிப்புணர்வு தேவை என்று தோன்றுகிறது. மகாராஷ்டிராவில், என்.சி.பி (எஸ்.பி) ஜூன் 2025 முதல் ஆண்டு, பாகுபாடற்ற வரதட்சணை எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது பாராட்டத்தக்கது. என்னை ஈர்த்த ஒரு செய்தி என்னவென்றால் “Angry Birds”(ஆங்ரி பேர்ட்ஸ்) - 2012 இல் தொடங்கப்பட்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு, அதில் பயனுள்ள வழியில் வரதட்சணை கோரிக்கைகளின் கொடுமையை சித்தரித்து அதனைப் பார்த்தபொழுது இப்பிரச்சனைப் பற்றி சிலபேர் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பது ஆறுதலாக இருந்தது. நிறைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கருத்தரங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் வரதட்சணை சட்டவிரோதம் மற்றும் ஒழுக்கக்கேடு என்று மக்களுக்கு அறிவுறுத்துகின்றன. இதைப்போல செயல் வடிவங்கள் இன்னும் தேவை. பெண்களுக்கு கல்வியை ஊக்குவித்தது போலவே, அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் தன் இணையரிடம் உறுதியாக இருக்க சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதையும் சொல்லித்தர வேண்டும். திருமணத்தைப் பற்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் அன்பை அடிப்படையாகக் கொண்ட உறவாக இருக்கவேண்டும் என அறிவுறுத்துவது அவசியம். முக்கியமாக ஆண்களுக்கு மனைவியை சமமாக மதிக்கும் பழக்கம், வரதட்சணை கோருவது ஆண்மையின் அடையாளமல்ல என்பதை வலியுறுத்தல், குடும்ப அழுத்தம் வந்தாலும் அதை மறுக்கும் வலிமையை வளர்த்தெடுப்பது வேண்டும். அவர்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே, திருமணம் என்பது குடும்பங்களிடையே நடக்கும் நிதி பரிமாற்றம் அல்ல என்றும், பெண்களை பொருட்களாக அல்லது வெறும் குழந்தை பெற்று தரும் கருவியாக அல்ல; தன் சிந்தனையுள்ள தனிநபர்களாகப் பார்க்கவேண்டும் எனவும் திருமணம் என்பது இரண்டு குடும்பங்களின் இணைப்பு மட்டுமல்ல; இரு நபர்களின் மதிப்பு, அன்பு மற்றும் சமத்துவத்தின் பயணம் என்பதையும் உணர்த்துவது தான் இதற்கு மிக முக்கியமான தீர்வாகும். சமூகத்தின் பங்கு: சமூகங்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல் தயக்கத்தை தவிர்த்து தலையிட வேண்டும். புதுமணப்பெண் வரதட்சணைக் கொடுமையின் அறிகுறிகளைக் காட்டினால், அல்லது சந்தேகத்திற்கிடமான நடத்தை வெளிப்பட்டால், குடும்பத்தை அணுகவும் அல்லது நெட்வொர்க்குகளை உடனடியாக எச்சரிப்பதும் செய்தால் பயனுள்ளதாகும். வரதட்சணை - மரியாதை / புகழ் என்ற தவறான மனநிலையை உடைக்கும் விவாதங்கள் சமூக ஊடகங்களில் நடத்துவது அவசியம். பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு சமூக கண்காணிப்பு ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்பட முடியும். சட்டரீதியான சீர்திருத்தம் - பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் குடும்ப வன்கொடுமையைத் தடுக்கவும் உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். விரைவான, நேர்மையான விசாரணை. காவலர்களுக்கும் நீதிமன்ற அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சி. சட்ட ரீதியான காப்பு, சமூக விழிப்புணர்வு, பெண்கள் கல்வி, பொருளாதார சுதந்திரம் ஆகியவை ஒருங்கிணைந்தால் மட்டுமே இந்தியா இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். பெண்கள் பாதுகாப்பு மையங்கள், சட்ட உதவி எண்கள், ஹெல்ப்லைன் விவரங்களை பொதுவெளியில் பகிரவேண்டும். இக்கொடுமையிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு வலுவான ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதுடன், சட்ட உதவி முதல் பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் மனநல வளங்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். வரதட்சணை மரணங்கள் என்பது வெறும் குடும்பப் பிரச்சனை அல்ல; அது சமூகக் குற்றம் என்று உணரும் போது தான் இதற்கான விடியல் நிகழும். வரதட்சணை மரணம், வன்கொடுமை, பெண்கள் ஒடுக்குமுறை ஆகியவற்றை முற்றிலும் ஒழித்தலே வளர்ந்த ஓர் சமுதாயத்தின் அடையாளம்.