articles

img

சமூக பொருளாதாரச் சுரண்டலின் வடிவம் - அ ராதிகா

சமூக பொருளாதாரச் சுரண்டலின் வடிவம்

திருமணம் என்பது ஆண் பெண் இருவருக்கிடையே அன்பினால் பிணைக்கப்படும்  அழகான உறவு. அத்தகைய உறவு இன்றைக்கு வியாபாரமாக மாறி பெண்களின் உயிரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. அழகான உறவை சிதைக்கும் ஏற்பாடாக வரதட்சணை என்ற கொடும் நோய் சமூகத்தை வேகமாக தாக்கிக்கொண்டிருப்பது அபாயகரமானதாகும். காலத்துக்கு ஏற்றபடி வரதட்சணை முறையும் மாறியுள்ளது. பணத்தின் மீதான ஆசை, குடும்ப கவுரவம், சாதி சடங்கு, குடும்ப பெருமை இவையெல்லாம் பெண்ணின் மீது திணிக்கப்பட்டு சக மனுசியாக பார்க்காமல் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் இயந்திரமாக பெண்ணைப் பார்ப்பது வரதட்சணைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. திருமண சந்தையில் கொடுக்கும் பொருட்களும் வரதட்சணை மதிப்பும் புதிய வடிவங்களில் உள்ளது.  சட்டப்படி வரதட்சணை குற்றமாக இருந்தாலும் சமூகத்தில் எந்தவித குற்ற உணர்வும் பயமும் இல்லாமல் இயல்பான ஒன்றாக  மாற்றப்பட்டுள்ளது. ஊடகங்களின் பங்கு நவீன பொருளாதார சூழலும் நுகர்வு கலாச்சாரமும் சமூகத்தில் எல்லாவற்றையும் ஆடம்பரம் ஆக்கிவிட்டது. சமூக வலைதளங்களில், ஊடகங்களில் தொடர்ச்சியாக ஆடம்பர திருமணங்கள் குறித்தும், திருமணத்தில் பெண் அணிந்திருக்கும் உடை, ஆபரணங்கள், பெண்ணுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் இவையனைத்தும் பெருமைமிக்கதாக திரும்பத் திரும்ப மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பது ஏதோ ஒரு விதத்தில் ஆடம்பரத்தையும் வரதட்சணையையும் நியாயப்படுத்துகிற வேலையை ஊடகங்களும் சமூகமும் செய்து வருகின்றன. வடநாட்டு திருமணங்களில் பின்பற்றி வந்த சம்பிரதாயங்களான மெஹந்தி போன்றவை தற்போது தமிழகத்திலும் அதிகமாகி வருகிறது. இந்நிகழ்ச்சிகளுக்காக அதிகமாக செலவிடப்படுகிறது. குறிப்பாக பெண் வீட்டார் இச்செலவுகளை ஏற்கும் நிலையும் உள்ளது. அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் இந்தியாவில் 1930 முதல் 1999 வரை நடைபெற்ற 74 ஆயிரம் திருமணங்களை ஆய்வு செய்ததில் 95 சதவீத திருமணங்களில் வரதட்சணை இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணம் முடிந்தவுடன் பெண்ணின் சம்பளம் முழுவதும் கணவர் கையில் இருக்கும் நிலையும், கணவரே மொத்த பொருளாதாரத்தையும் கையாளும் நபராகவும் குடும்பங்களில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. கொரோனாவுக்கு முந்தைய கணக்கீட்டின்படி 2019 ஆம் ஆண்டில் வரதட்சணை கொடுமையால் 7000 பெண்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 2000க்கும் அதிகமான வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டன. தேசிய குற்றப்பதிவு ஆணையம் அளித்துள்ள தகவலின்படி நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் பலியாகிறார். ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகிறார். ஆணாதிக்க வேர்கள் ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை விட ஆணையே எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்துவதும், குடும்பங்களில் ஆண் தான் முடிவெடுக்கிறவராகவும், ஆண் தான் குடும்பத்தை பாதுகாக்கும் தகுதி படைத்தவர் என்ற கண்ணோட்டமும் வரதட்சணைக்கு அடிப்படையாக உள்ளது. பெண் திருமணம் செய்துகொண்டு போய்விட்டால் குடும்பத்தைப் பார்க்க முடியாது என்ற எண்ணத்தால் அனைத்து வாய்ப்புகளும் ஆணுக்கு கொடுக்கப்படுகிறது. பெண்ணுக்கான சுதந்திரமும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. பெண் தன் இணையரை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை முற்றிலுமாக மறுக்கப்படுகிறது. பெண்களை குடும்பத்தின் சொத்தாக பார்க்காமல் பெண்களுக்கு சம உரிமை வழங்குகிற மனப்பான்மையை குடும்பங்களில் இருந்து தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது. சமூகம் கட்டமைத்துள்ள குடும்ப அமைப்புகள் பெண்ணின் விருப்பத்தை தெரிவிப்பதற்கு வாய்ப்புகள் அளிப்பதே இல்லை. சட்டத்தின் நிலை வரதட்சணையை தடுப்பதற்கு சட்டங்கள் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இச்சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. குறிப்பாக 498-A பிரிவை பெண்கள் தவறாக பயன்படுத்தியதன் மூலம் ஒரு சட்ட பயங்கரவாதத்தை உருவாக்கியுள்ளனர் என்று கல்கத்தா நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் இத்துறையில் ஆராய்ச்சி செய்யும் பல வழக்கறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் இந்த பிரிவு தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார்கள். மாறாக குறைந்த தண்டனை விகிதமே உள்ளது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த ஆய்வை மேற்கொண்ட பல்வன்சிங் (டாடா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ்) ராஜஸ்தானில் நான்கு காவல் நிலையங்களில் 498-A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 300 வழக்குகளை ஆய்வு செய்தார். முடிக்கப்பட்ட பெரும்பாலான வழக்குகளில் பெண்கள் தங்கள் கணவர் மற்றும் மாமியாரிடம் இருந்து வன்முறைகளை எதிர்கொண்டது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வரதட்சணை குற்றங்களில் உடல், உளவியல், பொருளாதாரம் என பலவகை வன்முறைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு மருத்துவ ஆதாரம் இல்லை. பல வழக்குகளில் பெண்கள் வழக்கு பதிவு செய்வதற்கு வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் துன்புறுத்தல் நடைபெறும்போது எந்த ஆதாரத்தை முன்வைப்பது? வழக்கு நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்கப்படுவதால் தண்டனை கிடைப்பதும் கடினமாகிறது. பாலின சமத்துவக்கல்வி காவல்துறை, நீதித்துறையில் பெண்கள், குறிப்பாக வரதட்சணை தடுப்பு சட்டம் குறித்த மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வளர்க்கும் வகையில் பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்களில் மாற்றம் அவசியம் தேவை. பெண்கள் மீதான பழமைவாத கற்பிதங்களை பள்ளிப்பருவத்திலிருந்தே தகர்த்தெறியும் முயற்சியை அரசு செய்ய வேண்டும். திருமணத்திற்கு வரதட்சணை தர மாட்டோம் என்பதை ஒரு இயக்கமாக கேரள பெண்கள் முன்னெடுத்துள்ளது பாராட்டத்தக்கது. மூலதன சமூகத்தில் திருமணம் கூட ஒரு வியாபார ஒப்பந்தம் போல் நடத்தப்படுகிறது. வரதட்சணை மூலம் பெண்களின் உழைப்பும் வாழ்க்கையும் சந்தைப் பொருளாக மதிப்பிடப்படுகிறது. முதலாளித்துவ சமூகத்தில் பெண்கள் இரட்டிப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் - வேலைகளிலும் குடும்பத்திலும். பெண்கள் விடுதலை என்பது வெறும் சட்ட சீர்திருத்தங்களால் மட்டும் அல்ல, வர்க்கச் சுரண்டலை ஒழிக்கும் போராட்டத்தோடு இணைந்தால் மட்டுமே சாத்தியமாகும். வரதட்சணை கொடுமை என்பது தனிப்பட்ட குடும்ப பிரச்சனை அல்ல, அது சமூக பொருளாதார சுரண்டலின் வெளிப்பாடு. பெண்கள் விடுதலை அடைய வரதட்சணையை ஒழிப்பது முதல் படி. அதற்கான சட்ட பாதுகாப்போடு சேர்ந்து சமூக மனநிலையை மாற்றும் போராட்டமும் அவசியம். பெண்களை பொருளாக அல்லாமல் மனிதர்களாக மதிக்கும் சமூகத்தை நோக்கிய போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.