பெண்களை சொத்தாகக் கருதும் எண்ணம் இருக்கும் வரை
இந்தியாவில் வரதட்சணை முறை என்பது வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார காரணிகளால் வேரூன்றியுள்ள பன்முகப் பிரச்சனையாகும். வலுவான சட்ட கட்டமைப்புகள் இருந்தபோதிலும் ஆழமான சமூக விதிமுறைகள் மற்றும் பயனற்ற அமலாக்கம் காரணமாக இந்த பிற்போக்கு நடைமுறை தொடர்கிறது. வரதட்சணையை முழுவதுமாக தடை செய்வதற்கு சட்ட சீர்திருத்தங்கள், கடுமையான சட்ட அமலாக்கம், குறிப்பாக சமூக மாற்றம் உள்ளிட்ட விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. பண்டைய காலங்களில் வரதட்சணை பெண்ணுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு வழிமுறை என்று தான் சொல்லப்பட்டது. காலப்போக்கில் இது சமூக விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் ஆழமாகப் பதிந்த ஒரு சமூகக் கடமையாக மாறிவிட்டது. 1961-இல் வரதட்சணை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டபோதிலும், சமூக விதிமுறைகள் வரதட்சணையை வழக்கமான நடைமுறையாக தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. நவீன வடிவங்கள் திருமணத்தின்போது மணமகளின் பெற்றோர் அதிக அளவில் பணம், நகை, மின்னணு பொருட்கள், அசையும் அசையா சொத்துக்கள் முதலியவற்றை மணமகன் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகிறது. முதலில் இது மகளின் பொருளாதார நலனை உறுதி செய்யும் முயற்சியாக தோன்றினாலும், இன்று அது மணமகன் வீட்டாருக்கு கட்டாயமாக செலுத்த வேண்டிய விலையாக மாறிவிட்டது. மணமகள் பெற்றோர் தரும் நகை, பணம் ஆகியவை “ஸ்திரீதனம்” (சீதனம்) எனக் கருதப்பட்டாலும் நடைமுறையில் அது மணமகன் குடும்பத்தின் உரிமையாக கருதப்படுகிறது. பெண்கள் குடும்பச் சொத்தில் பங்கு பெறுவதற்கு தடைகள் அதிகம் உள்ளதால் வரதட்சணை மகளின் சொத்துப் பங்காக கருதி வரதட்சணை பெண்களாலேயே நியாயப்படுத்தப்படுகிறது. சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார சுரண்டல் வரதட்சணை பெரும்பாலும் அந்தஸ்து மற்றும் கௌரவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் தங்கள் செல்வச் செழிப்பையும் அந்தஸ்தையும் வெளிப்படுத்த எவ்வளவு வேண்டுமானாலும் வரதட்சணை கேட்கலாம், கொடுக்கலாம். இது ஒரு சமூக அழுத்தமாக மாறியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் திருமணம் ஒரு பரிவர்த்தனையாக கருதப்படுவதால் வரதட்சணை என்பது ஒரு நல்ல துணையைப் பெறுவதற்கான விலையாகப் பார்க்கப்படுகிறது. வரதட்சணை மணமகளின் குடும்பத்தினர் மீது கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. நிதி நெருக்கடி மற்றும் வறுமைக்கு வழிவகுக்கிறது. குடும்ப வன்முறை, துன்புறுத்தல், வரதட்சணை மரணங்களுக்கு வழிவகுக்கிறது. பல ஏழைக் குடும்பங்கள் வரதட்சணை காரணமாக கடனில் விழுகின்றன. ஒவ்வொரு திருமணத்திற்கும் கொடுக்கப்படும் வரதட்சணை பல வருடங்கள் அக்குடும்ப வருமானத்திற்கு சமமாக அல்லது அதைவிட கூடுதலாக இருக்கின்றது. பெண்களின் நிலை பெண்களை பொருளாதாரச் சுமைகளாக கருதும் சமூகக் கருத்துகளை வரதட்சணை பிரதிபலிக்கிறது. இந்தக் கண்ணோட்டம் ஒரு பெண்ணை மணப்பதற்கு ‘இழப்பீடாக’ வரதட்சணை கோரிக்கையாக மாறுகிறது. திருமணச் சந்தையில் விலை பேசும் சந்தைப் பொருளாக சுயமரியாதை உள்ள பெண்கள் குறைத்து மதிப்பீடு செய்யப்படுகின்றனர். மகளின் பெற்றோர் பொருளாதாரச் சுழலில் சிக்கி வாழ்வோடு போராடவோ அல்லது பெண் குழந்தை பிறப்பைத் தவிர்க்கவோ முற்படுகின்றனர். பெண் சிசுக்கொலை, கருக்கொலைகள் அதிகரிப்பதற்கு இது காரணமாக உள்ளது. பெண் குழந்தைகளைப் பாரமாகப் பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. பரிசளிப்பது என்ற பாரம்பரியம் இன்று பெண்களின் தாழ்வு நிலையை நிரூபிக்கிற - மேலும் தாழ்த்துகிற சூழலாக மாறிவிட்டது. கொடூர விளைவுகள் சமீபகாலமாக வரதட்சணை துன்புறுத்தல்கள், தற்கொலைகள், கொலைகள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 6000 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன என அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத அல்லது மர்மமரணங்களாக, தற்கொலை மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டவை எண்ணிக்கையில் இன்னும் ஏற்றப்படவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களில் மட்டுமல்ல; செல்வம் கொழிக்கும் குடும்பங்களில் கூட வரதட்சணை மரணங்கள் நிகழ்கின்றன. திருப்பூர் ரிதன்யா முதல் கிரேட்டர் நொய்டா நிக்கி வரை நம்மால் உதாரணங்களை வரிசைப்படுத்த முடியும். மணமகன் குடும்பத்தினரின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாதபோது பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர், சித்ரவதை செய்யப்படுகின்றனர், கொலையும் செய்யப்படுகின்றனர். மத நிலைப்பாடு எந்த மதமும் வரதட்சணையை ஆதரிக்கவில்லை. இஸ்லாத்தில் திருமணம் என்பது பரஸ்பரம், மரியாதை மற்றும் சம்மதத்தின் அடிப்படையிலேயே உள்ள ‘புனித ஒப்பந்தம்’. மகள்களை சுமை என இஸ்லாம் கருதவில்லை. மாறாக இஸ்லாத்தில் மகள்களை வளர்ப்பது என்பது பெருமைமிக்க செயல் என கருதுகிறது. இஸ்லாம் பெண்களுக்கு உரிய “மஹர்” வழங்கவேண்டும் என குர்ஆன் கூறுகிறது. ஆனால் இன்று இஸ்லாம் மக்களிடையேயும் வரதட்சணை கலாச்சாரம் அழுத்தமாக ஊடுருவி வளர்ந்துள்ளது. சில பழங்குடி இன மக்களிடையே பெண்ணுக்கு அதாவது மணமகளுக்கு வரதட்சணையை மணமகன் வீட்டார் கொடுத்து பெண் எடுக்கும் போக்கு இன்றும் நிலவி வருகிறது. பெண்ணை உயர்வாகக் கருதும் எண்ணம் இம்மக்களுக்கு உள்ளது. பள்ளிகளில் இருந்தே... வரதட்சணை எனும் சமூகத் தீங்கை ஒழித்தால் மட்டுமே பாலின சமத்துவத்தையும் சமூக நீதியையும் பாதுகாத்திட முடியும் என்கின்ற முடிவுக்கு சமூகம் வரவேண்டும். பாரம்பரியமான சொத்துப் பங்குகள் பெண்களுக்கு வழங்கப்படவேண்டும். பெண்களின் கல்வி, பொருளாதார சுயமரியாதை வலுப்படுத்தப்படவேண்டும். ஆடம்பர திருமணங்கள், திருமணப் பரிசுகள் மறுக்கப்படவேண்டும். நுகர்வு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் பொருட்கள் அத்தனையையும் சீதனப் பொருட்களின் பட்டியலில் இணைப்பது கண்டிக்கத்தக்கது. பள்ளிகளில் சிறுவயதிலிருந்தே பாலின சமத்துவம் கற்பிக்கப்படவேண்டும். வரதட்சணை என்பது சட்டப் பிரச்சனை மட்டுமல்ல, சமூகவியல் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுப் பிரச்சனையாக கருதப்படவேண்டும். பெண்களைச் சொத்தாகக் கருதும் எண்ணம் இருக்கும்வரை வரதட்சணை ஒழியாது. பெண்களை சக தனி மனிதராக மதிக்கும் மனப்பான்மை வளர்ந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும். உச்சநீதிமன்றம் கூட “நாட்டில் வரதட்சணை தொடர்பான நிலைமை மேம்படவில்லை” என்று கவலை தெரிவித்துள்ளது. மேலும் “வரதட்சணையை முற்றிலும் ஒழிக்க சமூகப் புரட்சி தேவை” எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.