வரதட்சணை ஒழிப்புச் சட்டங்களும் அதன் நடைமுறைகளும்
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது ஒரு குடும்ப வன்முறையாகும். குடும்பத்தில் கணவன், மனைவியை அடிப்பது இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் கணவனின் உரிமையாகவே பார்க்கப்படுகிறது. அதை சட்டக் குற்றம் என்று சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, சில நீதிபதிகள் உட்பட. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961 திருமணத்தின் போது ஒரு தரப்பினரிடமிருந்து மறுதரப்பினர் பணமாகவோ, பொருளாகவோ, கேட்டாலோ அல்லது பெற்றாலோ இந்த சட்டப்படி அது குற்றமாகும். இந்த சட்டத்தில் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. கேட்பதும், பெறுவதும் ஒரு தட்டில் வைத்து பார்ப்பது பாதிக்கப்படுவருக்கு அநீதி இழைப்பதாகும். கேட்பவர்களையும், பெறுபவர்களையும் குற்றவாளி ஆக்கினால் யார் புகார் கொடுப்பது?. மேலும் திருமணத்தின் போது கேட்டால் தான் இச்சட்டப்படி அது வரதட்சணை ஆகும். திருமணத்திற்கு ஒரு வருடத்திற்கு பிறகு வரதட்சணை கேட்டால் அது குற்றமில்லை. மேலும் இந்த குற்றத்திற்கு தண்டனை மிகக் குறைவு. 498 (A) இபிகோ : (Sec.85 of BNS) வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காத நிலையில் 1983இல் 498(A) என்ற பிரிவு IPC-இல் சேர்க்கப்பட்டது. இதன்படி ஒரு கணவனோ, அவரின் உறவினர்களோ மனைவியை கொடுமைப்படுத்தி, அந்த கொடுமை மனைவியை தற்கொலைக்கு தூண்டினாலோ, உடல் ரீதியான, மனரீதியான காயங்களை மற்றும் பாதிப்பை ஏற்படுத்தினாலோ, அது 3 வருட சிறை தண்டனை மற்றும் அபராதத்திற்குரிய குற்றமாகும். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது மட்டுமல்லாமல், வேறு காரணங்களுக்காக உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளை ஏற்படுத்தினாலும் இந்த சட்டப்பிரிவு பொருந்தும். ஆனால் பல சமயங்களில் பாதிக்கப்படும் பெண்கள், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினால் தான் அது குற்றம் என்று நினைத்துக்கொண்டு வரதட்சணை கேட்டதாக புகார் கொடுப்பதும் உண்டு. உண்மையில், அவர்கள் கொடுமைகளை அனுபவித்து இருப்பார்கள். ஆனால் அதற்கு காரணம் வேறாக இருக்கும். சில சமயங்களில் வழக்குரைஞர்களின் ஆலோசனைகளின் பேரில் கூட இது நடக்கும். இது சட்டப்பிரிவை பற்றிய புரிதலற்ற தன்மையையே காட்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் 498 (A) பிரிவை சுலபமாக பயன்படுத்த முடியாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலதுறையில் அமைப்பபட்டிருக்கும் ஒரு குழு புகாரை பரிசீலித்து சம்மந்தப்பட்டவர்களை விசாரித்து அனுமதி கொடுத்தால் மட்டுமே எஃப்ஐஆர் (FIR) போடப்படும். பல சமயங்களில் இந்த குழுக்கள் பெண் அடிமைத்தன கருத்துகளின் அடிப்படையில் கட்டப் பஞ்சாயத்து பேசி மனைவியை சேர்ந்து வாழும்படி கட்டாயப்படுத்துவதும் உண்டு. உச்ச நீதிமன்றம் கணவரின் குடும்ப உறுப்பினர்களை பொத்தாம் பொதுவாக புகாரில் சேர்ப்பது தவறான நடைமுறை என்று தீர்ப்பு கூறியுள்ளது. யார் மேல் புகார் கொடுத்தாலும் புகாரில் அந்த நபர் என்ன கொடுமை செய்தார் என்பதை குறிப்பிட வேண்டும். இந்த தீர்ப்பை சரியாக புரிந்துகொள்ளாமல், கணவரின் குடும்பத்தினர் மீதோ, உறவினர்கள் மீதோ பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் அனைத்து புகார்களையும் பரிசீலிக்காமலே, அந்த புகாரை காவல்துறையோ, நீதிமன்றங்களோ தள்ளுபடி செய்வதும் உண்டு. கணவர் அடித்து இரத்தம் சொட்டச் சொட்ட வந்து நின்ற பெண்ணை பார்த்து ஒரு ஆய்வாளர் “என் கணவர் கூட தான் என்னை அடிக்கிறார். அதற்கென்று புகார் கொடுக்க முடியுமா?” என்று கேட்டிருக்கிறார். இதை பார்க்கும் போது, படித்து அதிகாரம் மிக்க பதவியிலிருக்கும் பெண்கள் கூட குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது தெரியவருகிறது. இது கல்வி மற்றும் வேலைக்கு அப்பாற்பட்டு, மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணாதிக்க கருத்துக்களே மக்கள் மனதில் வேருன்றி உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு. 498(A) - துஷ்பிரயோகமா? 498(A) சட்டப்பிரிவில் கொடுக்கப்படும் அனைத்து புகார்களும் பொய்ப் புகார்கள் தான் என்றும், அந்த பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவது என்றும் பொதுவான கருத்து நிலவி வருகிறது. மாதர் அமைப்புகளை பொறுத்தவரை, உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முன்வரும் போது அந்த புகார்களை வாங்கவே காவல்துறையினர் மறுத்துவிடுகின்றனர் என்பது தான் உண்மை. பணபலம், ஆள்பலம், அரசியல் பலம், சமூக அந்தஸ்து யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு சாதகமாகவே காவல் துறை இயங்குகிறது. இந்த ஆணாதிக்க சமூகத்தில் பலம் நிறைந்த தரப்பினர் பெரும்பாலும் கணவர் வீட்டார்களாகவே இருக்கிறார்கள். உபா (UAPA) போன்ற சட்டங்கள் வலது-இடது-மத்தி என்று எல்லா திசைகளிலும் அரசால் துஷ்பிரயோகம் செய்யப்படும் போது வருடக்கணக்காக சிறையில் வாடுபவர்களுக்கு பிணை வழங்கக் கூட நீதிமன்றங்கள் முன்வருவதில்லை. ஆனால் வரதட்சணை கொடுமை வழக்குகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பெரும்பாலும் துஷ்பிரயோகத்தை மையப்புள்ளியாக வைத்தே வழங்கப்படுகின்றன. இது சட்டப்பிரிவை நீர்த்து போகச் செய்கிறது. ஆண்கள் பாதுகாப்புக் குழுக்கள்: 2005இல் இந்த குழுக்கள் “இந்திய குடும்பங்களை பாதுகாக்கும் சங்கம்” (save Indian Family Foundation) என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் உறுப்பினர்கள் 498(A) குற்றச்சாட்டிற்கு உள்ளான கணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் ஆவர். 498(A) துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், எனவே இந்த பிரிவையே ஒழித்து விட வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் நோக்கம். ஆனால் மாதர் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் இந்த பிரிவு இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வரதட்சணைச் சாவுகள்: 1970-களில் “ஸ்டவ் வெடித்து இளம்பெண் மரணம்” என்ற செய்தி செய்தித்தாளில் வராத நாளே கிடையாது. வெடித்ததாகச் சொல்லப்படும் “ஸ்டவ்வை பார்த்தால் அது புத்தம் புதியதாகவே இருக்கும். இவ்வாறு இறந்த பெண்கள் அனைவரும் இளம் மனைவிகளாகவே இருந்தனர். உண்மையில், வரதட்சணை போதவில்லை என்பதற்காக இளம் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு இன்னொரு திருமணம் செய்து கொள்வதற்காக கணவரும் அவரது வீட்டாரும் கண்டுபிடித்த யுக்தி தான் இது. ஒரு கொலையை விபத்தாக மாற்றி தண்டனையிருந்து ஆயிரக்கணக்காக குற்றவாளிகள் இதன் மூலம் தப்பித்தனர். வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தில் இந்த குற்றத்திற்கு பொருந்தும் வகையில் பிரிவுகள் இல்லை. பெண் இறந்த வெகு நேரம் கழித்து தான் கணவன் வீட்டிலிருந்து அவள் வீட்டிற்கு தகவல் போகும். பெண் வீட்டார் வந்து சேர்வதற்குள் தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிடும். 304-B இபிகோ (Sec.80 of BNS) இந்நிலையில் தான்,1986இல் 304-B IPC “வரதட்சணைச் சாவு” என்ற பிரிவு கொண்டுவரப்பட்டது. இதன்படி திருமணமாகி 7 வருடங்களுக்குள் மனைவி இயற்கைக்கு மாறான வகையில் மரணம் அடைந்தால், அந்த பெண் இறப்பதற்கு முன் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் அது வரதட்சணைச் சாவு என்று கொள்ளப்படும். இதற்கு 7 வருடத்திலிருந்து ஆயுள் தண்டனை வரை கொடுக்கப்படும். தான் குற்றவாளி அல்ல என்பதை கணவர் தான் நிரூபிக்க வேண்டும். இதற்கு ஏற்றார்போல் இந்திய சாட்சிய சட்டத்தில் பிரிவு 114-B இணைக்கப்பட்டது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்கள் தான் அதாவது அரசு தரப்பு தான் குற்றம் நடந்ததை நிரூபிக்க வேண்டும். ஆனால் இந்த பிரிவின் படி அரசு தரப்பு, திருமணமாகி 7 வருடங்களுக்குள் வரதட்சணைக் கொடுமையால் நடந்த இயற்கைக்கு மாறான மரணம் என்பதை மட்டும் நிரூபித்தால் போதும். அவ்வாறு இல்லை என்பதை கணவர் தரப்பு தான் நிரூபிக்க வேண்டும். கொலை, தற்கொலை இரண்டிற்கும் இந்த பிரிவு பொருந்தும். இது ஒரு நல்ல சட்டமாக இருந்தால் கூட நடைமுறையில் இதன் நுணுக்கங்கள் தெரிந்த வழக்குரைஞர்கள், நீதிபதிகள் குறைவு தான். 306 இபிகோ: (Sec. 108 of BNS) கணவரும் அவரது வீட்டாரும் செய்யும் கொடுமையால் ஒரு மனைவி தற்கொலையே செய்துகொண்டாலும், தற்கொலைக்கு தூண்டுவது குற்றமாகும். இதற்கு 10 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்படும். இதற்கேற்றார் போல் இந்திய சாட்சிய சட்டத்திலும் மாறுதல் செய்யப்பட்டது. சட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளும், காவல்துறையின் நடைமுறைகளும் வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க தடையாகவே இருக்கின்றன