வரதட்சணை கொடுமைக்கு முடிவுகட்ட செப்.9 மாநில சிறப்பு மாநாடு
வரதட்சணை கொடுமைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மாநில சிறப்பு மாநாடு செப்டம்பர் 9-ஆம் தேதி (செவ்வாய்) திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் எம்.ஏ.நகரில் உள்ள சாரதாம்மாள் திருமண மண்டபம் எதிரில் நடைபெறுகிறது. மாற்று ஊடக மைய கலைக்குழுவின் பறை முழக்கத்துடன் மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் தொடங்கி; மாலை 6.30 முதல் 8 மணி வரை சிறப்பு மாநாடு நடைபெறும். கருத்தரங்கம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தை மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார் துவக்கி வைப்பார். கலைக்குழுவினரின் பறை முழக்கத்துடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை நிபுணர்கள் கலந்துகொண்டு கருத்துரை நல்குவார்கள். கவிஞர் ந.முத்துநிலவன், பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, முனைவர் ப.சுசீந்திரா ஆய்வாளர் கீதா நாராயணன் ஆகியோர் வரதட்சணை ஒழிப்பு குறித்து ஆய்வுப்பூர்வமான கருத்துகளை முன்வைப்பார்கள். மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலைமையில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.துளசி நாராயணன் வரவேற்புரை நல்குவார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்கள் இந்த மாநாட்டில் முன்னிலை வகிக்கின்றனர். வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தென்சென்னை இரா.வேல்முருகன், மத்திய சென்னை ஜி.செல்வா, வேலூர்-திருப்பத்தூர் எஸ்.டி.சங்கரி, செங்கல்பட்டு பி.எஸ்.பாரதி அண்ணா, காஞ்சிபுரம் கே.நேரு மற்றும் ராணிப்பேட்டை பி.ரகுபதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோர் சிறப்புரை நல்குவார்கள். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா தீர்மானம் முன்மொழிய, மாவட்டக்குழு உறுப்பினர் பி.பத்மா அதை வழிமொழிவார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.மோகனா ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார். சோழவரம் ஒன்றியச் செயலாளர் அ.து.கோதண்டம் நன்றியுரை நல்குகிறார். சமூக மாற்றத்திற்கான முயற்சி வரதட்சணை கொடுமை என்பது இன்றளவும் நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. இந்த சமூகக் கொடுமையை வேரோடு ஒழிக்க திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை வகுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சிறப்பு மாநாடு நடத்தப்படுகிறது. கட்சியின் அனைத்து தோழர்களும், பொதுமக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று வெற்றிகரமாக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.