articles

img

130வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனநாயகத்திற்கு கல்லறை தோண்டும் சூழ்ச்சி - டி.கே.ரங்கராஜன்

130வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனநாயகத்திற்கு கல்லறை தோண்டும் சூழ்ச்சி

 

2025 ஆகஸ்ட் 20-ஆம் தேதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் ஒரு அபாயகரமான மசோதாவை அறிமுகப்படுத்தினார். 130வது அரசியலமைப்புத் திருத்த மசோதா எனும் இது சட்டமானால் இந்திய ஜனநாயகத்தின் வேர்களையே வெட்டி வீழ்த்தும் கொடிய சட்டமாக அது இருக்கும். மசோதாவின் அடிப்படை:  நீதியற்ற தண்டனை இந்த மசோதாவின் மூல உள்ளடக்கம் அதிர்ச்சி கரமானது. ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்காக 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டால், பிரதமர், முதலமைச்சர் அல்லது எந்த அமைச்சரும் தானாகவே பதவியை இழந்து விடுவார்கள். நீதி மன்றத் தீர்ப்பின் அவசியம் இல்லை. குற்றம் நிரூபிக் fப்பட வேண்டியதும் இல்லை.

இதன் பொருள் தெளிவானது: பொய் வழக்கு போட்டு, 30 நாட்கள் சிறையில் வைத்தால் போதும் - 31-ஆம் நாளில் அவர்கள் பதவி இழந்துவிடுவார்கள்! இது “குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிர பராதி” என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை யை முற்றிலும் அழிக்கிறது. அரசியல் நிர்ணய சபையின் எச்சரிக்கை 1949 மே 19-ஆம் தேதி, அரசியல் நிர்ணய சபையில் பேரா.கே.டி. ஷா,  நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி குறித்து முக்கியமான கேள்விகள் எழுப்பி னார். “தேசத்துரோகம், லஞ்சம், ஊழல், ஒழுக்கக் கேடு” போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் நாடாளு மன்றத்தில் அமர தகுதியற்றவர்கள் என்று அவர் வாதிட்டார். ஆனால் அவர் கோரியது நியாயமான நீதி முறையை - நீதிமன்றத் தீர்ப்பை.

அண்ணல் அம்பேத்கர் அப்போது கூறினார்: “புதிய தேர்தல் என்பது பழைய உறுப்பினரின் தகுதியிழப் பின் விளைவு. ஆனால் அது நீதிமுறையின் மூலமே நடக்க வேண்டும்.”  இவ்வாறாக அன்று நமது சட்டப் பேரறிஞர்கள் நீதி நிர்வாகத்தின் மீது வைத்த நம்பிக்கையை இன்றைய அரசு சிதைக்கிறது. 1975 அவசரநிலையும் 2025 அரசியலமைப்புத் திருத்தமும் இந்திரா காந்தியின் 1975 அவசரநிலையும் இன்றைய 130வது திருத்தமும் ஒரே நோக்கம் கொண்டவை - எதிர்ப்பை ஒழிப்பது. ஆனால் முறை வேறு. அன்று நேரடியாக ஜனநாயகத்தை நிறுத்தி னார்கள். இன்று அரசியலமைப்புக்குள்ளேயே ஜன நாயகத்தைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அன்று தற்காலிகம், இன்று நிரந்தரம். மாநில அரசுகளை கவிழ்க்க முடியும் தமிழ்நாட்டின் திமுக அரசு, கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் அரசுகள் கூட்டாட்சி உரிமைகளுக்காக போராடி வருகின்றன. இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சி முதல்வர் கள், அமைச்சர்கள் மீது ஊழல், தேசத்துரோகம் உள்ளிட்ட  எத்தகைய பொய் வழக்கையும் புனைந்து, 30 நாட்கள் சிறையில் வைத்து, அரசையே கவிழ்த்து விட முடியும்.  இது “ஆபரேஷன் கமலம்” - மாநில அரசுகளை கவிழ்க்கும் பாஜகவின் திட்டத்தின் சட்டபூர்வ வடிவம். கர்நாடகத்தில் முயற்சித்தது, மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றது, இப்போது அதை நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.

சர்வதேச நவபாசிச மாதிரி துருக்கியில் எர்டோகன், ஹங்கேரியில் ஆர்பன், பிரேசிலில் போல்சானரோ - இவர்கள் எல்லாம் ஜன நாயகத்தை உள்ளிருந்து அழித்த முறையே இது. முதலில் ஊடகங்களை கட்டுப்படுத்துவார்கள், பின்னர் நீதித்துறையை பலவீனப்படுத்துவார்கள், இறுதியில் எதிர்க்கட்சிகளை சட்டப்பூர்வமாக ஒழிப்பார்கள். இந்தியாவில் 2014-ல் இருந்து பெகாசஸ் (Pegasus) ஒட்டுக்கேட்பு, விமர்சனம் செய்யும் ஊடக நிறுவனங்களை ஒடுக்க ஐடி ரெய்டு,  நீதித் துறை திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்படுவது - இவை யெல்லாம் அந்த திட்டத்தின் பகுதிகள். 130வது திருத்தம் என்பது இதன் இறுதிக் கட்டம் எனலாம். பொருளாதார பின்னணி:  கார்ப்பரேட் நலன்கள் விவசாயிகள் போராட்டம், தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், விலைவாசி உயர்வு, வேலையின்மை  உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக எழுகிற மக்களின் இந்த அனைத்து போராட்டங்களும் அதானி,  அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொந்தரவாக உள்ளன. அந்த போராட்டங்களை வழி நடத்தும் அரசியல் தலைவர்களை ஒழிக்கவும் இந்த மசோதா பிரயோகிக்ப்படும் அபாயம் உள்ளது. மார்க்சிய பொருளாதார அடிப்படையில் பார்த்தால், முதலாளித்துவ வர்க்கம் நெருக்கடியின் போது சர்வாதிகார முறைகளுக்குத் திரும்புவது வரலாற்று உண்மை.  இது பற்றி இத்தாலிய மார்க்சிய தத்துவ அறிஞர் அன்டோனியோ கிராம்சி கூறிய கருத்துகள் இன்றைய இந்திய நிலமையை அப்படியே விளக்குகின்றது: ஆட்சி செய்யும் வர்க்கம்,

தன் சித்தாந்தத்தை மக்கள் ‘இயற்கையானது’ என நம்பும் வகையில் கல்வி, ஊடகம், பண்பாடு மூலம் பரப்புகிறது. இன்று இந்துத் துவம் ஒரு குறிப்பிட்ட இந்து தேசியவாதத்தை ‘இந்தியத் தேசியம்’ என்று திரித்து, மற்ற சமூகங்களை ஓரம்கட்டு கிறது. கிராம்சி கூறிய இந்த கருத்துக்கேற்ப, முதலா ளித்துவ ஆளும் வர்க்கம் மேலிருந்து கீழே மாற்றங்க ளைக் கொண்டுவருகிறது.  பொருளாதார நெருக்கடி தீவிரமாகும் போது, எதேச்சதிகாரத்தை - சர்வாதிகாரத்தைக் கையில் எடுக்கிறது. அப்படிப் பட்ட செயல்முறையின் அடுத்த கட்டம் தான் 130வது திருத்தம். ஊடக அடக்குமுறைக்கு புதிய கருவி இந்த மசோதா ஊடகங்களையும் கட்டுப்படுத்தும். எதிர்க்கட்சித் தலைவர்களை நேர்காணல் செய்யும் ஊடகவியலாளர்கள், அவர்களது கருத்துக்களை எழுதும் எழுத்தாளர்கள், ஒன்றிய ஆட்சியாளர்களை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் - இவர்களை “சதிகாரர்கள்” என்று முத்திரை குத்தி சிறையில் அடைக்க முடியும். 30 நாட்கள் சிறையில் இருந்தால், அவர்களும் தகுதியிழந்து விடுவார்கள். நீதிமன்றங்களின் பாத்திரம்:  கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் இதுவரை சில முக்கிய விஷ யங்களில் மக்கள் பக்கம் நின்றுள்ளது. தேர்தல் பத்திரங்களை ரத்து செய்தது, சட்டப் பிரிவு 370 தொ டர்பான வழக்கில் மாநில உரிமைகளை வலியுறுத்தி யது. ஆனால் நீதிபதிகள் நியமனத்தில் அரசின் தலையீடு அதிகரித்து வருகிறது. 130வது திருத்தம் நீதித்துறையின் மீதான கடைசித் தாக்குதல் என்றும் சொல்ல வேண்டும்.

“நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே தண்டனை” என்ற இந்த கொள்கை நீதித்துறையையே அர்த்தமற்றதாக்கி விடும். நாடாளுமன்ற கட்டுமானத்தின் சிதைவு இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்க ளவை இரண்டையும் பாதிக்கும். மாநிலங்களவைக்கு மாநில அரசுகள் நியமிக்கும் உறுப்பினர்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த முடியும். மக்களவையில் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை பொய் வழக்கு கள் மூலம் அகற்ற முடியும். இது இருசபை முறையின் சமநிலையை அழிக்கும். மாநில ஆளுநர்களின் அதிகாரம் கூடும் மாநில ஆளுநர்கள் ஏற்கனவே மத்திய அரசின் கைப்பாவைகளாக, ஏவலாளிகளாக செயல்படுகின்ற னர். இந்த மசோதாவின் மூலம், முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டால், ஆளுநர்கள் நேரடியாக ஆட்சி செய்ய முடியும். இது ஆளுநர் ஆட்சியை சட்டப்பூர்வமாக்கும் ஆபத்தான முன்மொழிவு. தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்தல் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் ஏற்கனவே கேள்விக்குறியாகியுள்ளது. மாநில தேர்தல்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர்களை 30 நாட்கள் சிறை யில் வைத்து, அவர்களின் வேட்புமனுக்களை நிராக ரிக்க இந்த மசோதா வழி வகுக்கும். இது சுதந்திர மான தேர்தல் நடத்துவதையே சிதைக்கும்.

கூட்டாட்சி நிதி ஒதுக்கீட்டில் அச்சுறுத்தல் மாநில அரசுகளுக்கு மத்திய நிதி ஒதுக்கீடு ஏற்கனவே பாரபட்சமாக நடந்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி, எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு குறைவான நிதி. இந்த மசோதாவின் மூலம், எதிர்க்கட்சி முதலமைச்சர்களை நீக்கிவிட்டு, நிதி ஒதுக்கீட்டையும் கட்டுப்படுத்த முடியும். இந்த மசோதா குறிப்பாக தலித், ஆதிவாசி, சிறு பான்மை சமூகங்களின் தலைவர்களை குறிவைக்கும். இது சமூக நீதியின் மீதான நேரடித் தாக்குதல். சிதையும் கனவுகள் மகாத்மா காந்தி கனவு கண்ட ராம ராஜ்யம் - நீதியும் சமத்துவமும் நிறைந்த சமுதாயம்; நேரு கற்பனை செய்த மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியா; அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட  சமத்துவ உரிமைகள். இவையெல்லாம் இந்த மசோதாவால் சிதைக்கப்படுகின்றன. காந்தி கூறிய “சத்யாகிரகம்” - உண்மைக்காக போராடுதல் - இன்று மிகவும் அவசியமாகிறது. “அநீதியான சட்டங்களுக்கு கீழ்ப்படிய வேண்டிய கடமை யாருக்கும் இல்லை” என்ற அவரது வார்த்தை கள் இன்று எதிரொலிக்கின்றன. உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெருமை பேசும் இந்தியா, இன்று உலகின் மிகப்பெரிய ஜன நாயக சிதைவின் உதாரணமாக மாறும் அபாயத்தில் உள்ளது.

மக்கள் எதிர்ப்பின் அவசியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை “நவபாசி சத்தின் ஆதாரம்” என்று கண்டித்துள்ளது. வரப்போகும்  மிகப் பெரும் ஆபத்தை முன்னறிவித்துள்ளது. இதை எதிர்த்து தெருக்களில் இறங்கிப் போராட வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிலாளர்கள், விவ சாயிகள், மாணவர்கள், பெண்கள், சிறுபான்மையினர் - அனைவரும் ஒன்றுபட்டு ஒரு பெரிய எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க வேண்டும். மாநில சட்ட சபைகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது வெறும் ஒரு சட்டம் அல்ல. புதிய வகை பாசிச ஆட்சியை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஆயுதம் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.