articles

img

வரதட்சணை வாங்குவது அவமானம், குற்றம்! - உ.வாசுகி

வரதட்சணை வாங்குவது அவமானம், குற்றம்!

பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் மனுவாத சித்தாந்தம், ஆளும் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் சித்தாந்தமாக இருப்பதால் பல வடிவங்களில் அவை நமது கருத்தியலில் ஊடுருவுகின்றன.

வரதட்சணை மரணங்கள் சமீப காலத்தில் மீண்டும் செய்திகளாகிக் கொண்டுள்ளன. அதிர்ச்சியளிக்கும் விதத்தில் விவரங்கள் வெளிவருகின்றன. வரதட்சணையோடு வேறு சில அம்சங்கள் வெளிப்படுவதையும் பார்க்க முடிகிறது. உதாரணமாக கணவனின் பாலியல் சித்ரவதை, இன்ஸ்டாகிராமில் மனைவி பதிவு போடுவது மற்றும் சிறு தொழில் செய்து சொந்தக் காலில் நிற்பதை விரும்பாத போக்கு போன்றவை. ‘ உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று சொன்னது போல், பிசினஸ் புருஷ லட்சணமா?  சமூக ஊடகமே தவறு என இவர்கள் சொல்வதில்லை, அதை மனைவி பயன்படுத்தக் கூடாது என்று தான் கட்டளை இடுவார்கள். சில வட மாநிலங்களில் சாதி பஞ்சாயத்துக்கள் பெண்கள் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? சமூக ஊடகங்களில் கூடா நட்பு வரும் என்றால்,  அதில் ஆணும் சம்பந்தப்பட்டிருக்கிறார்; ஏன் விவாதம் அது குறித்துப் போவதில்லை? வரதட்சணையின் அடிப்படை என்ன என்று பார்க்க வேண்டும். பொதுவாக பிரச்சனைகளுக்கான காரணிகளை மேலோட்டமாக இனம் காண முடியாது. ஆழமான சமூக பொருளியல் பின்புலம் இருக்கும். அத்தகைய‌ அம்சங்களைத் தேடிப்பிடித்தால் தான், வேரோடு கெல்லி எறிய முடியும். வரதட்சணை அத்தகையதொரு  நடைமுறை. வன்முறையின் வேர் வரதட்சணை என்று கூறுவதை விட, பெண்ணடிமைத்தனத்தின் முக்கிய வெளிப்பாடாக வரதட்சணை இருக்கிறது என்றே பார்க்க வேண்டும்.

 மார்க்சிய கண்ணோட்டம்

இத்தகைய பிரச்சனைகள் ஒரு சில குடும்பங்களில் தான் நிலவுகின்றன என்றோ, இது - கணவன் மனைவி அல்லது மாமியார்- மருமகள் பிரச்சனை என்றோ குறுக்கிப் பார்ப்பது பயன் தராது. ஏங்கெல்ஸ் அவர்களின்  “ குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற‌ நூலில் பெண்ணடிமைத்தனம் தோன்றியதற்கான அரசியல் சமூக பொருளாதார காரணிகள் விளக்கப்பட்டுள்ளன.  வர்க்க சமூக அமைப்பும்  பெண் அடிமைத்தனமும் ஒத்திசைந்து  தோன்றியது,  தனியுடமை  இதற்குக் களம் அமைத்தது, காலப்போக்கில் புராண இதிகாசங்கள், பண்பாட்டுக் கருத்தியல்கள்  மூலம் பெண்ணடிமைத்தனம் நியாயப்படுத்தப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டது என்பதெல்லாம் சுட்டிக்காட்டப் படுகிறது. பெண் விடுதலை, தனி உடமை ஒழிப்போடு இணைந்தது என்பது முன் வைக்கப்படுகிறது. அதே சமயம் தனி உடமை ஒழிக்கப்பட்ட சமூகத்தில் உடனடியாக எல்லாம் மாறிவிடாது; அரசியல் சமூக பண்பாட்டு ரீதியான வலுவான தொடர் தலையீடுகள் தேவைப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், முதலாளித்துவமானது, இந்தியச் சூழலில் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டாமல் சமரசம் செய்து கொண்டது என்று குறிப்பிடுகிறது. அதாவது  அதற்கு முந்தைய சமூக எச்சங்களை அது  முழுமையாக ஒழித்துவிட வில்லை. முந்தைய உற்பத்தி உறவுகளின், சமூகக் கட்டமைப்பின் சில  கூறுகள் -  சாதியம், ஆணாதிக்கம் போன்றவை தொடர்ந்தன. அவை உருவாக்கும் மலிவு உழைப்பை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொண்டது. மேலும் பொதுவான ஊதிய கட்டமைப்பைக் குறைவாக வைத்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்கிறது; பெண்ணின் வீடுசார் இலவச உழைப்பு முதலாளித்துவத்துக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதே பணிகளை வணிக ரீதியாக செய்யும் போது அதற்குப் பணமதிப்பு கிடைக்கிறது.  பெண்ணின் சமூக மதிப்பு குறைவாக இருப்பதால், வீட்டுக்குள் அவள் செய்வதும் மதிப்பிழந்தே நிற்கிறது.  ஆகவே காலப்போக்கில் பெண்ணடிமைத்தன நடைமுறையோ,  வடிவங்களோ மாறியிருக்கலாம்; ஆனால் அதன் உள்ளடக்கம் நீடிக்கிறது. பண்பாட்டின் பெயரில்  நியாயம் கற்பிக்கப்படுகிறது. எனவே தான் சட்டங்கள் வந்தாலும் அது குற்றம் என்பது சமூகத்தின் மனதில் பதிய மறுக்கிறது.  

வரதட்சணையின் தோற்றம்

சொத்துடமை குடும்பங்களில், உயர்சாதி குடும்பங்களில் குடும்ப சொத்தின் ஒரு பகுதி, மகள் திருமணத்தின் போது  சீதனமாகக் கொடுக்கப்படும் வழக்கம் இருந்தது. கணவன் வீட்டில் அந்த சொத்து பெண்ணுக்குப் பாதுகாப்பு தரும் என நம்பப்பட்டது. ஆனால் நடைமுறையில் சொத்தின் மீது பெண் கட்டுப்பாடு இழந்து, பெண் கொண்டு வருவதெல்லாம் நம்முடையது என  மாப்பிள்ளை வீட்டின் கட்டுப்பாட்டுக்கு சென்ற நிகழ்ச்சிப் போக்கு படிப்படியாக ஏற்பட்டது.  உயர் சாதி வழக்கம் அனைத்து சாதி சமூகங்களுக்கும் பின்னர் பரவியது. சமஸ்கிருத மயமாக்கல் இதற்கு ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. அடுத்து, நவீன தாராளமயத்தின் விளைவான நுகர் பொருள் கலாச்சார சூழலில், வரதட்சணை சமூக அந்தஸ்து பெற்று விடுகிறது. பொருட்கள் பட்டியலில் அது பிரதிபலிக்கிறது. தங்கம், வெள்ளி, தற்போது  வைரம், பிளாட்டினம் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளது.சொகுசு கார்கள், ஆடம்பரத் திருமண ஏற்பாடு எனத் திருமணத்தின் போது துவங்கி, திருமணத்திற்குப் பின்னும் தொடர்கதையாகிறது. மாப்பிள்ளை பிசினஸ் செய்ய, சம்பந்தி இறந்தால் மாப்பிள்ளைக்கு மோதிரம், சங்கிலி போடுவது வரை, நாத்தனார் திருமண செலவு, மச்சான் படிப்பு செலவு என அத்தனைக்கும் பெண் வீட்டாரைத் தொந்தரவு செய்வது, மனைவியை அடித்து பிறந்த வீட்டுக்குத் துரத்துவது, பிரசவ செலவு, குழந்தைக்கு நகை நட்டு, பெயர் சூட்டு விழா, முதல் ஆண்டு நிறைவு என‌ சகலத்துக்கும் அடித்துப் பிடுங்குவது…கேட்டால் உங்கள் பெண்ணுக்குத் தானே செய்கிறீர்கள் என்று பதில் சொல்வது!

மாதர் சங்க ஆய்வு

2003ல் நாடு முழுவதும் 10000 பெற்றோர் மற்றும் திருமணமாகாத பெண்களிடம் நடந்த ஆய்வு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தொகுத்து வெளியிடப்பட்டது. வரதட்சணையின் பல பரிமாணங்கள் வெளிவந்தன. அதில் பேசிய தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி சுஜாதா மனோகர், வரதட்சணை மிக மோசமான மனித உரிமை மீறல் என்றும், பெண்ணின் குடியுரிமை சமமாகப் பார்க்கப் படாத நிலையை நியாயப்படுத்துகிறது, நிறுவனமயப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினார். இது பற்றிய சட்டங்கள் தவறாகப் பிரயோகிக்கப் பட்டால் அதை சரி செய்து கொள்ளலாம்; துஷ்பிரயோகம் என்ற‌ பெயரால்  சட்டங்களை பலவீனப்படுத்துவது சரியல்ல என்றும் கூறினார்.  பெண்ணின் வாழ்க்கையில் திருமணமே இலக்கு என்ற நிலை நிலவுவது வரதட்சணை வளர வழி வகுக்கிறது என்றும் கருத்துக்கள் வந்தன. பெண்ணின் ‘அழகு’ குறித்த ஆணின் கண்ணோட்டம், அந்த அளவுகோலின் படி, உயரம், குள்ளம், கருப்பு, மாநிறம், அங்க லட்சணம் போன்றவற்றுக்கு ஏற்ப வரதட்சணை கூடும், குறையும். அதிக வரதட்சணை பெற்று திருமணமும் செய்து விட்டு, உருவ கேலி செய்து இம்சிக்கும் கொடுமையும் உண்டு.

நிரந்தர ஏடிஎம்

வங்கிக் கணக்கில் கூட பணம் இருந்தால் தான் எடுக்க முடியும். ஆனால் பெண் வீடு என்றென்றும் பணம் கொடுக்கும் இயந்திரமாகக் கருதப்படுகிறது. பெண் வீட்டாரின் சொத்துக்களையும் பணத்தையும் தம்முடையது என மாப்பிள்ளை வீடு மிக இயல்பாக நினைப்பதற்குப் பின்னால் ஆணாதிக்க சமூக சிந்தனைகள் இல்லாமல் இருக்குமா? சமூக அந்தஸ்துக்கு ஏற்ப திருமண செலவு, உணவு, மண்டபம், சொகுசு கார் என்ற‌ நிலைமையை உருவாக்கிவிட்டு, பெண் வீடே முன்வந்து செய்தது, நாங்களா கேட்டோம், இது வரதட்சணை பிரச்சனையே அல்ல என்று ஒரே போடாய் போட வேண்டியது.. இது தான் இன்றைய டிரெண்ட்! உதாரணமாக திருப்பூர்  ரிதன்யா, கன்னியாகுமரி மாவட்டம் ஜெபீலா, திருவள்ளூர் மாவட்டம் லோகேஸ்வரி தற்கொலைகளை எடுத்துக் கொண்டால்,  ஒருவேளை அதில் சிலர் வரதட்சணையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைக்காமல் போயிருக்கலாம்; ரிதன்யா தனது தந்தைக்கு அனுப்பிய 9 குரல் செய்திகளில் வரதட்சணையால் கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம்; அதனால் வரதட்சணை பிரச்சனையாக இதை கருத வேண்டாம் என்ற முடிவுக்கு எப்படி போக முடியும்?  500 சவரன் நகை,  இரண்டரை கோடி ரூபாய் திருமணச் செலவு, 70 லட்சம் ரூபாய் சொகுசு கார் என்பது வற்புறுத்தப்பட்டதா அல்லது பெண் வீட்டார் தாமாக முன்வந்து கொடுத்தார்களா என்பது பிரச்சனையே அல்ல. இவ்வளவு செய்ய வேண்டும் என்கிற சூழல் ஏன் ஏற்படுகிறது என்பதுதான் மையப் பிரச்சனை. அதுவும் பெண்ணைப் பெற்றவர்கள் தான் செய்ய வேண்டும் என்பது ஏன்? 350 சவரன் தான் போட முடிந்தது,  மீதி 150 சவரன் போட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது,  மாப்பிள்ளை பிசினஸ் செய்ய முதலீட்டுக்குப் பணம் கேட்டார்கள் என்பதெல்லாம் வரதட்சணை கணக்கில் வராதா?

அகமண முறையின் பங்கு

அகமண‌முறை வரதட்சணையில் முக்கிய பங்காற்றுகிறது. சாதிக்குள்ளேயே வரன் பார்க்கும் நிர்ப்பந்தம் மார்க்கெட் ரேட்டை உயர்த்துகிறது. சாதி மறுப்பு திருமணங்கள் குறைவாக இருப்பதும்,  சாதி ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதுமான சூழல் தான், சாதி சங்க மாநாடுகளில் கம்ப்யூட்டர் படித்த பெண் என்றால்,  சமூக ஊடகங்களை எல்லாம் பயன்படுத்தி கெட்டுப் போய் விடுவார்கள்; பெண்களை கம்ப்யூட்டர் படிக்க வைக்கவும் கூடாது; படித்திருந்தால் அந்த வீட்டில் பெண் எடுக்கவும் கூடாது என்று துணிச்சலாக பிற்போக்குக் கருத்துக்களைப் பேச வைக்கிறது.

யார் அதிகாரம் கொடுத்தது?

சக மனுஷியை அடிப்பது, உடல் ரீதியாக சித்திரவதை செய்வது என்பது எந்தக் காரணத்துக்காக நடந்தாலும் ஏற்க முடியாது. சில சமயம் கணவர் அடித்தார் என்று ஒரு பெண் சொன்னால்,  எதற்காக அடித்தார் என்கிற கேள்விதான் இயல்பாக வரும். அப்படி கேட்பது என்பது,  சில காரணங்களுக்காக அடித்தால் நியாயம் தான், சிலவற்றுக்கு அடித்தால் அது நியாயம் இல்லை,  இதற்குப் போயா அடித்தார் என்றே பொருள் படும். எதனால் அடித்தார் என்று கேட்பதே ஒரு வகையில் வன்முறையை ஆதரிப்பதாகும்.  பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவமானகரமாகப் பேசுவதற்கும், மிதியடியாக நடத்துவதற்கும், கொளுத்துவதற்கும், கொல்வதற்கும்  அடிப்பதற்கும் எங்கிருந்து அதிகாரம் வருகிறது?  என் பொண்டாட்டி நான் அடிப்பேன் கொல்லுவேன், நீ யார் அதைக் கேட்க என்ற‌ ஆணவம் யார் கொடுப்பது? பெண் இரண்டாம் தர சமூக அந்தஸ்தில் இருப்பதும், மனைவியை உடமையாகப் பார்க்கும் பார்வையும் தானே. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் வந்ததே வரலாறு தான்.சாதாரணமாக வந்து விடவில்லை; ஒரு மாபெரும் போராட்டம் அது. பாஜக ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி மனிதவளத் துறை அமைச்சராக இருந்த போது, வாடிக்கையாக அடித்தால் தான் வன்முறை என சட்டத்தை வரையறுத்தார். பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. பிறகு பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் ஆலோசனைகள் பெற்று, ஐமுகூ அரசு, விரிவான சட்ட வரையறையைக் கொடுத்தது. உடல் ரீதியான, மன/வார்த்தை ரீதியான, பொருளாதார ரீதியான, பாலியல் ரீதியான துன்புறுத்தல் என வகைப்படுத்தப்பட்டது. அரசும் சட்டமும்  எங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பது சரியல்ல என்றெல்லாம் வாதங்கள் வந்தன. அதைத் தாண்டித் தான் சட்டம் கொண்டு வரப்பட்டது. வரதட்சணைக் கொடுமைகளும் குடும்ப வன்முறை என்ற வரையறைக்குள் வரும்.

ஊடகங்களின் சித்தரிப்பு

ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பு, பெரிய பெரிய ஸ்டார்களின் நடிப்பில் பெண்ணடிமைத்தனம் பெருமைக்குரியதாகக் காட்டப்படுவது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே, இப்படித் தான் இருக்க வேணும் பொம்பள.., உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா, சாத்வீகம்-பயானகம்- பிரஜோதகம் போன்ற வசனங்கள், ரெட்டை வால் குருவி உட்பட இரு தார மணத்தை நகைச்சுவையாக, கணவன் திண்டாடுவதாகக் காட்டுவது, குடும்பப் பெண்கள் இரவு நேரத்தில் வீட்டில் தான் இருப்பார்கள் என்பது போல்  பலவற்றை சொல்லலாம். பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் மனுவாத சித்தாந்தம், ஆளும் ஆர் எஸ் எஸ். – பாஜகவின் சித்தாந்தமாக இருப்பதால் பல வடிவங்களில் அவை நமது கருத்தியலில் ஊடுருவுகின்றன.'

எனவே நமது போராட்டம் பரந்துபட்டதாக, அனைத்துத் தளங்களிலும் நடைபெற வேண்டும். பெண் சுமையல்ல… தலைமுறைகளின் அடையாளம்! வரதட்சணை வாங்குவது அந்தஸ்து அல்ல, அவமானம், குற்றம்! ஆடம்பர திருமணம் அவசியம் அல்ல! பெண்ணின் உயிருக்கு விலை வைக்காதீர்கள்.  வரதட்சணையைப் புறக்கணிப்போம்..குடும்ப உறவுகளை ஜனநாயகப் படுத்துவோம்!