articles

img

இளம் தலைமுறையினருக்கு உணர்த்துவோம்! - கே.பாலபாரதி

இளம் தலைமுறையினருக்கு உணர்த்துவோம்!

மல்லிகை என்றான், மயங்கி நின்றேன்; ரோஜா என்றான், சிவந்து நின்றேன்; தாமரை என்றான், தலைகுனிந்து நின்றேன்; வர்ணித்த பிறகு வரதட்சணை என்றான், நான் வாடி நின்றேன்!” - எழுத்தாளர் கவிஞர்  கந்தர்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமுஎச கவிதை பயிற்சி முகாமில் உருவான இந்த கவிதை வரதட்சணைக் கொடுமையின் உண்மையை வேதனையுடன் வெளிப்படுத்துகிறது. 1980-1990 வரையிலான காலகட்டங்களில் வரதட்சணை கொடுமைகளும் அதற்கெதிரான கவிதைகளும் பட்டிமன்றங்களும் தமிழ்நாட்டை முற்றுகையிட்டிருந்தன. “ஸ்டவ் வெடித்து இளம் பெண் மரணம்”, “திருமணமாகி இரண்டே மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை” -இதுபோன்ற பல செய்திகள் தினசரி நாளேடுகளின் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்திருந்தன. பெண் சிசு மற்றும் கருக்கொலை நிகழ்வுகளோடு வரதட்சணை கொலைகளும் தற்கொலைகளும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிக்கொண்டிருந்தன அப்போது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல பெண்கள் அமைப்புகள் தனியாகவும் ஒன்றிணைந்தும் அதற்கெதிரான போராட்டங்களை வலுவாக நடத்தின. 21ஆம் நூற்றாண்டின் சோகங்கள்  21ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டைக் கடந்துகொண்டிருக்கும் இந்த தருணத்தில் திருப்பூர் ரிதன்யாவின் தேம்பலும் அழுகையும் தொலைக்காட்சி வழியாக வந்து இந்தியாவையே அதிர வைத்தது. அந்த அழுகையின் குரல் இன்னும் நம்மைப் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது. 20ஆம் நூற்றாண்டோடு முடிந்துபோன விஷயமாக வரதட்சணையும் இன்னும் பிற பெண்களுக்கெதிரான பழமைத் துயரங்களும் முடிந்த பாடில்லை என்பதை இச்சம்பவம் ஓங்கி அறைந்து நமக்கு உணர்த்தியிருக்கிறது. கல்வியும் வேலையும் பெண்களுக்கு சுதந்திரத்தை தரும் என்ற நம்பிக்கை இன்னும் அசைக்க முடியாத பெரிய நம்பிக்கையாகவே இருந்து வருகிறது. ஆனால் தம் தந்தை வாங்கிக்கொடுத்த 70 லட்சத்திற்கும் மேலான காரை தானே ஓட்டிச் சென்று மரணத்தை தழுவிய ரிதன்யா அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தது வரதட்சணைதான். குமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்த திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்த ஜெபிலாமேரி திருமணமாகி ஆறே மாதத்தில் தூக்கில் தொங்கினார். ஓடோடி பிற உயிர்களைக் காத்த அந்த செவிலியரின் உயிரை இறுதியாக  காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த லோகேஸ்வரி திருமணமாகி நான்கு நாளில் தூக்கில் பிணமாகத் தொங்கினார். இவர் பிஏ பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். உத்தரப்பிரதேசம் நொய்டாவில் தன் ஆறுவயது குழந்தை முன்பாக நிக்கி என்ற தாயை வரதட்சணைக்காக மாமியாரும் கணவரும் எரித்துக்கொன்ற சம்பவத்தின் ஆரவாரம் இன்னும் அடங்கியபாடில்லை. 2024ல் உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் அன்ஷிகாவின்  மரணம் பயங்கரமானது; அவரது சகோதரரும் தந்தையும் கோபத்தில் வீட்டையே கொளுத்திவிட்டனர். மாமனார் மாமியார் எரிந்து சாம்பலாக பெண் வீட்டார் சிறைக்குச் செல்ல, இன்னும் அந்த கொந்தளிப்பு அங்கே அடங்கவே இல்லை. ராஜஸ்தானில் சஞ்சு பிஷ்னோய் என்ற ஆசிரியை வரதட்சணைக் கொடுமை தாங்க முடியாமல் தன் மூன்று வயது குழந்தையோடு மண்ணெண்ணெய் ஊற்றி தாயும் சேயும் எரிந்து சாம்பலான துயரத்தின் வெப்பம் தணியவே இல்லை. கேரளத்தில் விஸ்மயா மரணம் மிக சோகமானது. அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக பணிபுரிந்த விபன்ஷிகா, வரதட்சணைக் கொடுமையால் மூன்று மாத கைக்குழந்தையைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். கேரளாவைச் சேர்ந்த பெண் இவர். 2025 செப்டம்பர் 2ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் பூஜா வரதட்சணை காரணமாக தூக்கு மாட்டி உயிரிழந்துள்ளார். ஒரு வயது பெண் குழந்தையின் தாயாகவும் வங்கியில் காசாளராகவும் பணிபுரிந்து வந்தவர். அவரது பெற்றோர் எத்தனை கனவுகளோடு அவரைப் படிக்க வைத்திருப்பார்கள், தம் மகள் வங்கிப் பணிக்குச் சென்றபோது எப்படி மகிழ்ந்திருப்பார்கள். அவையனைத்தையும் நொடிப்பொழுதில் அழித்துவிட்டது வரதட்சணை. வரலாற்றுத் தொடர்ச்சி வேத காலத்தில் ஆரிய தந்தை தம் மகளுக்கு புண்ணிய கன்னியாதானம் செய்ய வேண்டுமானால் தட்சணை வழங்க வேண்டுமென்றும் பசுக்கள் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்றவற்றில் யானைகள், குதிரைகள், தேர்கள், வீரர்கள், பணிப்பெண்கள், அடிமைகள் தட்சணையாக வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. வரதட்சணை என்பது நிலவுடைமை சார்ந்த பழமையான சமூகத்தின் செல்லப்பிள்ளை. அன்று மாப்பிள்ளைக்கு தேர் கொடுத்தார்கள், இன்று மாப்பிள்ளைக்கு கார் கொடுக்கிறார்கள். வேறுபாடு அவ்வளவுதான். டாக்டர், பொறியாளர், அரசுப் பணியாளர்  -அதற்கேற்ப வரதட்சணைகளின் மதிப்பு கூடுகிறது அல்லது குறைகிறது. அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் உலக வங்கியின் அறிக்கையின்படி 1960 முதல் 2008 வரை இந்தியாவின் 17 மாநிலங்களில் திருமண உறவுகள் குறித்த ஆய்வில் வரதட்சணை என்ற செயல்முறை எந்த இடத்திலும் குறைந்திருக்கவில்லை என குறிப்பிடுகிறது. அதாவது அனைத்து திருமணங்களிலும் வரதட்சணை அதில் ஒன்றாக இருந்திருக்கிறது. தேசிய குற்றப் பதிவு ஆவணத்தின்படி 2012ல் 8233 பேர் வரதட்சணையால் உயிரிழந்திருக்கிறார்கள். 2022ல் 6450 வரதட்சணை தொடர்புடைய இறப்புகள் நடந்துள்ளன. 2017 முதல் 2022 வரை 35,493 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. வரதட்சணை கொடுமையால் இறப்பவர்களின் எண்ணிக்கை பாலியல் தாக்குதலால் உயிரிழப்பவர்களை விட 25 மடங்கு அதிகமாகும். நாளொன்றுக்கு சராசரியாக 20 பெண்கள் வரதட்சணையின் காரணமாக கொல்லப்படுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சணை காரணமாக கொல்லப்படுகிறார். தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு 22 பெண்களும், 2020ல் 40 பெண்களும், 2021ல் 27 பெண்களும் வரதட்சணையின் காரணமாக மரணமடைந்திருக்கிறார்கள். சமூக மனநிலை “உங்கள் பெண்ணுக்குத் தானே செய்கிறீர்கள்” என்ற சமாதானம் வேறு. “டாக்டர் மாப்பிள்ளை என்றால் சும்மாவா? அதற்கேற்ப என்ன செய்வீர்களோ அது உங்கள் விருப்பம்” என பெருந்தன்மையோடு ஒதுங்கிக்கொள்வதும், வேலை பார்த்தாலும் ஊதியத்தை சரிபார்க்கும் வேலையை கணவரோ அவரது குடும்பமோ செய்து வருவதும் இயல்பான எந்தவித குற்ற உணர்வுமில்லாத செயல்களாக மாறியிருக்கின்றன. “ஒருமுறை கூட என் மனைவி என்னிடம் எதுவும் கேட்டதில்லை, பெரிய அதிகாரியாக இருந்தாலும் அடக்கமானவர்” என நற்சான்றிதழ்களையும் வழங்கிவிடுகின்றனர். அடக்கமானவர்கள் எங்கே இருப்பார்கள்? சுடுகாட்டில்தான் அடக்கமானவர்கள் இருப்பார்கள். ஆனால் பெண்ணை ஏன் உயிரோடு அடக்கமாக்குகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். தீர்வின் திசை தனித்து பெண்கள் வாழக் கூடாது என்பது மனுஸ்மிருதியின் சட்டம். ஆகவே எப்படிப்பட்டாவது பெண்ணை “கரை” சேர்க்க பெண்ணைப் பெற்றவர்கள் படும்பாடு சொல்ல முடியாத சோகம்தான். பெண்ணைப் பற்றிய இத்தனை ஆணாதிக்க கருத்துகளோடுதான் திருமண உறவுமுறைகள் இங்கே தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதனை வெறும் சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. முடியவில்லை என்பதுதான் அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே வரதட்சணை என்ற புரையோடிப்போன இந்த நோய், அதன் வேர்களை அறிந்து அதனை அகற்றுவதற்குரிய செயல்பாட்டைத் துவங்குவோம். வரதட்சணை பெறுவது, வழங்குவது இரண்டுமே குற்றம் என்பதை இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம். வரதட்சணைக்கு எதிராக ஒன்றுபடுவோம், உறுதியேற்போம்.