வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: கோவையில் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
கோயம்புத்தூர், டிச.7 - தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மூலம் கோவையில் இறந்த வாக்காளர்கள் உட்பட சுமார் 5 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்புத் திருத்தப் பணி விவரங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 32.25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கும் பணி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்றது. தற்போது வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்று, அதனை செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் வகைப்பாடு இப்பணியின் மூலம், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சம் பேர் ஆகும். நீக்கம் செய்யப்பட்டவர்களில், இறந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் ஆவர். மீதமுள்ள 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள், மற்றும் இரட்டைப் பதிவு உள்ளிட்ட காரணங்களுக்காக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி வாரியான நீக்க விவரங்கள் மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட தரவுகளின்படி, அதிகபட்சமாக கோவை வடக்கில் 66 ஆயிரத்து 525 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக வால்பாறையில் 29 ஆயிரத்து 691 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இறந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 592 பேர், தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள், இரட்டைப் பதிவு உள்ளிட்ட வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் முடிக்கப்படும். திட்டமிட்டபடி டிசம்பர் 10-ஆம் தேதி கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர். (ந.நி.)