காசாவில் கொல்லப்பட்டவர்களின் இறுதி வார்த்தைகளைத் தொகுத்துத் தமிழில் ‘மரித்தோர் பாடல்கள்’ எனும் புத்தகமாக அளித்திருக்கிறார் தோழர் அ.சி.விஜிதரன். சிபிஐ(எம்) தென்சென்னை மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்குவதோடு, உடனே வாசித்திருக்க வேண்டாமோ என்று கூட யோசிக்க வைத்தது. நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டுகிறபோதும் நமது கைகளுக்குக் குருதியில் நனைந்ததைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது.
லாயன் ஹமதாவின் கடைசி அழைப்பு
“அவங்க எங்க காரைப் பார்த்துத் துப்பாக்கி யால் சுட்டுக்கிட்டே இருக்காங்க. காரில் இருக்கும் எல்லாருமே செத்துப் போயிட்டாங்க. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு, கூட்டிட்டுப் போயிடுங் களேன்...” என அழுதுகொண்டே தொலைபேசி யில் பேசும் ஐந்து வயது குழந்தையின் பெயர் லாயன் ஹமதா. “செல்லக்குட்டி, பயப்படாதீங்க. நாங்க வந்துட்டே இருக்கோம். என் கூட போன்ல பேசிட்டே இருங்க, போனை வைச்சிடாதீங்க” என பதிலளித்துக் கொண்டே செம்பிறை சங்கத்தைச் சார்ந்த பெண் அந்தக் குழந்தையோடு சுமார் மூன்று மணி நேரமாகப் பேசுகிறார். இறுதியில் என்ன நடந்தது? கொடூரத்தின் முகம் அந்தக் குழந்தையைக் காப்பாற்றச் சென்ற மருத்துவ ஊர்தி மீது அமெரிக்கத் தயாரிப்பான M 830 A1 வகை குண்டை வீசியதோடு, அந்தக் குழந்தை இருந்த கார் மீது 365 ரவுண்டு துப்பாக்கிக் குண்டுகளையும் பிரயோகித்திருக்கிறது இஸ்ரேலிய ராணுவம். பிஞ்சுக் குழந்தை லாயன் ஹமதா உட்பட அனைவருமே பிணமாகத்தான் மீட்கப்பட்டிருக்கிறார்கள். தன்னைக் காப்பாற்றுங் கள் எனக் கெஞ்சி அழும் குழந்தையின் அழுகுரலைக் கேட்கவே முடியவில்லை. துயரம் தாளாமல் தவித்த தருணத்தையும், கண்களில் திரளும் கண்ணீரையும் கடந்துவிட்டு யாரால் தொடர்ந்து வாசித்துவிட முடியும்?
போராட்டத்தின் உயிர்ப்பு
முதலாளித்துவ உச்சபட்ச கொடூரத்தின் முகம் இஸ்ரேல் அதை எதிர்த்த போர்க்குணத்தின் வலு பாலஸ்தீனம் எனும் அறிமுகத்தோடு தொடங்கும் இப்புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் வாசிப்போரை அதிரச் செய்கிறது. காசாவின் ஆக்கிரமிப்பில் இஸ்ரேலால் கொல்லப் பட்டவர்களைப் பற்றி எழுதும்போது ‘தியாகியான வர்கள்’ (Martyr) என்றே பொதுவாகப் பதிவு செய்கின்றனர். ஆனால் ‘மரித்தோர் பாடல்களில்’ கொலை செய்யப்பட்டவர்கள் என்றே பயன் படுத்தப்பட்டுள்ளது. கோரத்தின் நேரடி சாட்சியங்கள் “அவன் இன்னமும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான். அவன் உயிரோடு வந்துவிடுவான் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவனது தாத்தா, மாமா, மற்ற காசா குழந்தைகளோடு போய்விட்டான். “ ஐந்து வருடங்களாகக் குழந்தை இல்லாத நிலையில், தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவனான காலிதைப் பற்றி அவனது அம்மா ‘அமல்’ கூறிய வார்த்தைகள் இவை. பிறக்கும்போதே மற்றொரு குழந்தையான ஆதம் இறந்த நிலையில், உயிரோடு இருந்த காலித் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட கதை இது. மரணத்தின் விளிம்பில் வாழ்வு ‘அவனது பிறப்புச் சான்றிதழ் வருவதற்குள் இறப்புச் சான்றிதழ் வந்துவிட்டது.’ பிறந்து வெறும் 51 நாட்களே ஆன நிலையில், இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தை ராயன் நாதிர் சுலைமானின் முகம் இணையதளத்தில் பகிரப்பட்டு, அதற்குக் கீழே எழுதப்பட்ட வாசகங்களைப் படிக்கும்போது முதலாளித்துவப் போர் வெறியின் அருவருப்பான முகமும் கூடவே நிழலாடுகிறது.
துயரத்தின் குரல்கள்
‘நான் எப்போதெல்லாம் அழ வேண்டுமென நினைக்கிறேனோ அல்லது எப்போதெல்லாம் பலவீனமாக நினைக்கிறேனோ அவர்கள் என்னை அழ வேண்டாம் என சொல்கிறார்கள். நாங்கள் அழுவதில் இருந்து கூடவா தடை செய்யப்பட்டு விட்டோம்..?’ தாக்குதலுக்கு உள்ளாகி கிட்டத்தட்ட 120 நாட்கள் உயிர் பிழைத்திருந்து இறக்கும் தறுவா யில் முனைவர் ரஹஃப் தனது முகநூலில் எழுதிய பதிவு இது. இஸ்ரேலின் குரூர முகத்தையும், அதற்குத் துணை நிற்கும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தையும் அம்பலப்படுத்துகிற இத்தகைய பதிவுகள் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. காசாவின் இறுதிக் குரல்கள் ‘நான் காசாவில் இருந்து பேசுகிறேன் யாராவது கேட்கிறீர்களா..?’ சுயாதீன ஒளிப்பதிவாளரான 22 வயது மோஷாப் அஸூர் தனது கடைசி காணொளியில் பேசிய வார்த்தைகள் இவை. நாம் வாழ்கிற சமகால சமூகம் சந்தித்த தாக்குதல்களிலேயே மிக மோசமான போர் இதுவாகத்தான் இருக்கும்.
போராட்டத்தின் வலிமை
மானுடத்தை புதைத்து, மனித நேயத்தைத் தகர்த்து நாடு பிடிக்கப் பேயாய் அலையும் முதலாளித்துவத்தை எதிர்த்து வெற்றி பெற என்ன செய்யப் போகிறோம் நாம் எனும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது மரித்தோர் பாடல்கள் தொகுப்பு. கவிஞரின் குரல் “நான் என் மக்களின் போராட்டங்களைப் போற்றுகிறேன் ஏனெனில் அவை போற்றுதலுக்குரியவை என் எதிரில் இருப்பவர்களைத் தூற்றுகிறேன், ஏனெனில் அவர்கள் தூற்றுதலுக்குரியவர்கள் என்பதே யதார்த்தம்...” இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பாலஸ்தீன எழுத்தாளர் முஸ்தபா அல் செளஃபா வின் கவிதை நம் மனதின் குரலை எதிரொலிக் கிறது. தாக்குதலின் போது, குண்டு வீசிக் கொல்லப்பட்ட பாலஸ்தீன எழுத்தாளர் இவர்.
மானுட விடுதலையின் குரல்
மானுட விடுதலையைக் கோருகிற, மானு டத்தின் மனசாட்சியை உலுக்குகிற கவிதைகளை, பதிவுகளைக் கோர்த்துத் தொகுப்பாக வெளி யிட்டிருக்கிற தோழர் அ.சி.விஜிதரன் இத்தொகுப் பின் முகப்பில் எழுதுகிறார்: ‘ஆக, மிச்சமாய் இருக்கும் துளி கண்ணீரில், ஒரு துளியைத் தருகிறேன் இரத்தமும், மண்ணும் படிந்திருக்கும் உங்கள் கைகளில் ஒரு துளி ஈரமாக அது இருக்கட்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம் காசா, சுதந்திர பாலஸ்தீனம் அமையட்டும்.’
காசாவுடன் இணைந்திருப்போம்
மரித்தோர் பாடல்கள் தொகுப்பை வாசித்து முடிக்கும்போது மேற்குறிப்பிட்டுள்ள வரிகளே மீண்டும் மீண்டும் நமக்குள் ஒலிக்கிறது. ஆம், உலக மக்கள் அனைவரும் காசாவுடன் இணைந்திருப்போம். பாலஸ்தீன விடுதலைக் காகக் குரல் கொடுப்போம் எனும் உணர்வைத் தரும் மிக முக்கியமான படைப்பை நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் தோழர் அ.சி.விஜிதரன். அவருக்கும், மாநாட்டில் வெளியிட்ட சிபிஐ(எம்) தென்சென்னை மாவட்டக் குழுவிற்கும், பதிப்பித்த சிந்தன் பதிப்பகத்திற்கும் நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அனைவரும் அவசியமாக வாசிக்க வேண்டிய நூல் ‘மரித்தோர் பாடல்கள்’. ஏனெனில் இது வெறும் வாசிப்பு மட்டுமல்ல, நாம் முன்னெடுக்கிற போராட்டத்தின் ஒரு பகுதி.