தஞ்சாவூரில் சலங்கை நாதம் கலை விழா தொடக்கம்
தஞ்சாவூர், மே 11- தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் கலை விழா, கைவினைப் பொருட்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்த விழாவை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, மேயர் சண்.ராமநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். நிகழ்வில், ஒன்றிய அரசின் கலாச்சார துறை இயக்குநர் பல்லவி பிரசாந்த் ஹோல்கர் பேசுகையில், இந்த சலங்கை நாதம் கலை விழா தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த விழா நாட்டுப்புற மற்றும் உள்ளூர் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள ஏறத்தாழ ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனர். இதேபோல் நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்கள் தங்களது கலைப் பொருட்களைப் பொதுமக்களின் பார்வைக்காக அரங்குகளில் அமைத்துள்ளனர். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே தகவல் தொடர்பு ஏற்படுத்த முடிகிறது. கலைஞர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக இக்கலைவிழாவுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை கலைஞர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்” என்றார். முன்னதாக, தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் கே.கே.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மைய அலுவலர் உமாசங்கர் நன்றி கூறினார். இந்த விழா தொடர்ந்து மே 18 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 6.30 மணி முதல் நடைபெறும். மேலும் கைவினைக் கலைஞர்களின் பொருட்காட்சி, விற்பனை, பாரம்பரிய உணவுத் திருவிழா நாள்தோறும் பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. மே 18 ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.