tamilnadu

img

அரசு மருத்துவமனைகளின் சீர்கேட்டை கண்டித்து மயிலாடுதுறையில் 8 இடங்களில் சிபிஎம் போராட்டம்

மயிலாடுதுறை, டிச. 30- மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் சீர்கேட்டை கண்டித்து, திங்களன்று காலை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் 8 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய- நகர செயலாளர்கள் டி.ஜி.ரவி, டி.துரைக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கண்டன உரையாற்றினார்.  மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும், சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் அளிப்பதற்கு கதிர் இயக்க நிபுணர்களை பணியில் அமர்த்த வேண்டும், போதிய மருத்துவ வசதி இல்லாததால் சிகிச்சைக்காக திருவாரூர், தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் அவலநிலை தொடருவதால் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், மருத்துவமனையில் பணிபுரியும், உதவியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் ஒப்பந்த முறையை கைவிட்டு, நிரந்தர தொழிலாளர்களாக பணியில் அமர்த்த வேண்டும், நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தரங்கம்பாடி, ஆக்கூர், சீர்காழி, திருமுல்லைவாயில், கொள்ளிடம், குத்தாலம், கிளியனூர் உள்ளிட்ட இடங்களிலும், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்ட மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.