tamilnadu

சிறுபான்மையினர் தனிநபர்கடன், சிறுதொழில்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினர் தனிநபர்கடன்,  சிறுதொழில்கடன் பெற விண்ணப்பிக்கலாம்

ஆட்சியர் தகவல்

நாகர்கோவில்,மே 11- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர்கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில்கடன், விராசாத்(கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.8,00,000- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்). திட்டம் 1-இன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20,00,000-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம்,   பெண்களுக்கு 6 சதவீத  வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.30,00,000- கடன் வழங்கப்படுகிறது.   கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 10,00,000- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000- ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000- கடன் வழங்கப்படுகிறது. மேலும்,  சிறுபான்மையின மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000- வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள் / இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குமரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை இம்மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.