tamilnadu

img

படைப்பில் இருப்பான் பாரதி..!

படைப்பில் இருப்பான் பாரதி..!

தேசவலம் கிளம்பினான் பாரதி தன்னதனியாக அதே உடையணிந்து அப்படியே முண்டாசு மீசை முறுக்கி விட்டு நிமிர் கம்பீரமாகவே! பகலே தேர்தெடுத்தான் ஏனோ மறக்காமல் மிதியடிகள் மாட்டினான் தடமெங்கும் மண்டிய அசுத்தங்கள் கிடப்பது அறிந்து விட்டான்போல்!  வளமான சிந்திப்பில் கவி ஏட்டுக்கட்டேடு ஏதோ யோசனையாக கனத்த தடியொன்றும் எடுத்து கொண்டான்! இப்போதெல்லாம் நொறுக்கு தின்பண்டம் தண்ணீர் பாட்டிலடங்கிய ஜோல்னாபை தோளில் தொங்க விட்டு இறுக்க பிடித்தும் கொள்கிறான்!  தான் யாரென்று கண்டு பிடித்து விட்டால் ம்… நவீனவாதிகளின் அவசரகதி தெரியவில்லை கூலிங் கிளாஸ் மாட்டி நேர்கொண்ட பார்வையை மறைத்து பார்த்தான்! முதலில் காளியை வணங்க ஆலயம் தேடியபோது பெருந்தெய்வ வழிபாடு குவிந்திருப்பது கண்டு மானசீகமாய் மட்டும் அவளை நினைத்தான்!  பசி எடுத்தது பிரமணர் ‘வால்’ அல்லாதோர் பதாகை தொங்காத சிற்றுண்டி தேடவும் ஹோட்டல்களே எங்கும் அதிலும் உயர்தரமோ ருசி பாகுபாடு கசந்து பசியமர்த்தாது நகர்ந்தான்!  கல்விச்சாலைக்குள் நுழைந்து கவனிக்க காவுவாங்கப்பட்ட தகுதி சிதைந்த ஊமையாயிருக்க பெருங்கூடங்களுக்குள் விற்பனைக்கவுச்சியான உயர்நிலை விழுக்காடு சான்றுகள் நாத்தத்தில் வருந்தம் அடைந்தான்!  இப்போது வரை சாதி பரிவாரங்கள் பாப்பா பள்ளி தாண்டி வேறெங்குமே கலந்து நிறைந்து சகிப்பாகவில்லைபோல் அதென்ன ஆங்கிலம் எழுந்தோடுகிறது தவழ்ந்தபடியே இருக்கும் தாய்மொழி சிறுமைக்காக சற்றே குமுறினான்!  காணி நிலமெல்லாம் கட்டடங்கள் முளைப்பு குயில் வந்த தோப்புகள் கேளிக்கை கிளர்ச்சியோடு மயக்கமாகி கிடப்பதில் திரும்பிடவும் நினைத்தான்! கடவுள்களின் கருத்தாளர்களின் பெயரில் வெருப்புணர்வு சொற்கள் விதைக்கப்பட்டு ‘ஒரே…’காவிச்சாயமென்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்னாகும் பதறினான்!  அன்பு கருணை உதவுதல் பரந்த நோக்க வேரில் அன்னியமே விளையுமோ அரண்டு போய் விழுந்தான்! கோலம் கெட்ட காலத்தின் நிகழ்வில் கவியெழுதிச் சொல்வது அய்யகோ… முடியாத கற்பனை என உள்ள படைப்பில் மட்டும் இருப்பான் பாரதி..!