tamilnadu

img

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு! தமிழகத்தை மீண்டும் வஞ்சித்தது மோடி அரசு!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பு!  தமிழகத்தை மீண்டும் வஞ்சித்தது மோடி அரசு!

சென்னை, நவ. 18 - மதுரை, கோவை மெட்ரோ ரயில்  திட்ட அறிக்கையை நிராகரித்து, ஒன்றிய பாஜக அரசு மீண்டும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாம் அடுக்கு நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்காக, தமிழக அரசின் ரூ. 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக, மது ரை மெட்ரோ திட்டம் ரூ. 11,368 கோடி மதிப்பீட்டில் முன்னெடுக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 32 கிலோமீட்டர் தூரத்திற்கு 17 ரயில் நிலையங்களுடன் திருமங்கலம் - ஒத்தக்கடையை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்து ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்தது. இதேபோல கோயம்புத்தூருக்கும் ரூ.10,740 கோடி மதிப்பிலான மெட்ரோ  திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR), 2023 ஜூலையில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைத்த மூன்று ஆண்டுகளில், மதுரை, கோவைக் கான ஒருங்கிணைந்த மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் தெரிவித்தார். இதனால், 2030-க்குள் மதுரையிலும் கோவையிலும், தமிழ்நாட்டின் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்ட கொள்கை 2017-இன் படி 20 லட்சத்துக்கும் அதிக மான மக்கள் தொகை கொண்ட நக ரங்களில் மட்டுமே மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி கொடுக்க முடியும் என்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கோவையில் 15.84 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாகவும், மதுரை நகர்ப் புற பகுதியில் 14.7 லட்சம் பேர் மட்டுமே  இருப்பதாகவும் ஒன்றிய பாஜக அரசு காரணம் காட்டியுள்ளது. இது, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியே என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, 20 லட்சத்துக்கும் குறை வான மக்கள் தொகை கொண்ட ஆக்ரா  (16 லட்சம்), பாட்னா (17 லட்சம்), போபால் (18 லட்சம்) ஆகிய நகரங்களுக்கு மட்டும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய ஒன்றிய பாஜக அரசு, தமிழ கத்திற்கு மட்டும் 20 லட்சம் என்ற மக்கள் தொகையைக் காரணம் காட்டுவது ஏன்? என்றும் கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன. இதனிடையே, “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காட்டிலும் மதுரை, கோவை நகரங்களில் தற்போது எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பது குறித்து ஒன்றிய அரசுக்கு விளக்கம் அளிக்கப்படும்” என்று சென்னை மெட்ரோ  (CMRL) நிர்வாகம் கூறியுள்ளது.

சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

 மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை நிராகரிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். “மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம்,  புவனேஸ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்களின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கு  குறைவாக இருந்தபோதும், அங்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி?” என்று சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.