இரும்பின் காலத்தைப் பாருங்கள் என்று உலகிற்கு செய்யப்பட்டுள்ள அறிவிப்பு எமது பெருமையின் மகுடம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள x தளப் பதிவில், “இரும்பொன், கரும்பொன், கருந்தாது, இரும்பு, எஃகு, கொல்லன், கருமைக்கொல்லன், உலை, உலைக்கூடம், உலைக்கல், துருத்தி, மிதியுலை என்பன போன்ற இரும்பு எஃகுத் தொழில்நுட்பம் தொடர்பான பல பதிவுகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
இவையெல்லாம் கற்பனையில் முகிழ்த்தவை அல்ல. சங்க காலத்திற்கும் முன்பே தமிழ் நிலத்தில் புழக்கத்திலிருந்த தொழில்நுட்பத்திற்கான இலக்கியத்தின் பதிவுகள் என்பது அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்கிறது. இன்று தமிழ்நாடு முதல்வர் வெளியிடப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ குறித்த அறிவிப்பு.
5300 ஆண்டுகளுக்கே முன்பே தமிழ்நாட்டில் சிறந்து விளங்கிய தொழில்நுட்பம் ஐயத்திற்கு இடமின்றி அறிவியல் வழியில் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது பெரு மகிழ்வு.
இரும்பு புன்னை மரத்தின் கரிய கிளைகளுக்கும்; நீலம் மரத்தின் பசுமையான இலைகளுக்கும்; வெள்ளி மரத்தின் இலைகளின் நடுப்பகுதியில் காணப்படும் நரம்புகளுக்கும் ஒப்பிடும் அதி நுண்ணறிவு இயற்கையைக் கூர்ந்து நோக்கி வளர்த்தெடுக்கப்பட்ட பேரறிவின் அடையாளம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்