புதுக்கோட்டை, ஜன.23- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா வியாழக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி வழியாக நகர்மன்றத்தைச் சென்றடைந்தது. இப்பேரணியில் பொதுமக்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். 50 பேருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ)சு.நடராஜன், வட்டாட்சியர் பரணி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் இரா.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.