சென்னை, ஜன. 23 - ஹிந்துஸ்தான் ஜிங்க் குழுமத்துக்கு வழங்கப்பட்ட அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசின் கனிமவளத்துறை அறிவித்துள்ளது. அரிட்டாபட்டி பகுதி பல்லுயிர் பெருக்க மண்டலம் என்பதை கருத்தில் கொண்டு, இந்த சுரங்க அனுமதி ரத்து செய்யப்படு வதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இது அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டார மக்களை பெரும் மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. ஒன்றிய அரசின் அறிவிப்பை, பட்டாசு வெடித்தும் இனிப்பு கள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதைத் தடுத்த தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வும் மேலூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: “ஒன்றிய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியை, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் குழு வினர் தில்லியில் உள்ள அவரது அலு வலகத்தில் சந்தித்தனர். ‘நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம பகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமும் பல கலாச் சார பாரம்பரிய தலங்களும் உள்ளன’ என்று ஒன்றிய அமைச்சரிடம் தெரிவித்தனர். சுரங்க அமைச்சகமும் 2024 டிசம்பர் 24 தேதியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், ‘டங்ஸ்டன் ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரியத்த லம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்துக்கு எதிராக கருத்துகள் பெறப் பட்டுள்ளன’ என்று கூறியிருந்தது. இந்நிலையில், ஜன.25-ம் தேதி அன்று நடைபெற்ற சந்திப்பின் போது, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்களின் சார்பில் சென்றிருந்த விவசாயிகள் குழுவினர், ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் குழுவினரின் கோரிக்கை களை பொறுமையாகக் கேட்டறிந்த ஒன்றிய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்ப தில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒன்றிய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள் ளது” என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையாக வெளியிட வேண்டும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முற்றாக ரத்து செய்தும், அதுதொடர்பான அறிவிப்பை அரசாணையாகவும் வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. வியாழனன்று காலை, டங்ஸ்டன் திட்டம் தொடர்பான பொது விசாரணையில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “மேலூர் வட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கெதிரான மக்கள் போராட்டமும், மக்கள் ஒற்றுமையும் மிக உன்னத மானது என பாராட்டினார். மேலூர் வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வேறு பாடுகளைக் கடந்து போராடியுள்ளனர். தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு மாபெரும் ஒற்றுமை மற்றும் கூட்டுப் போராட்டத்தை நடத்திக் காட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தப் போராட்டத்தில் இறுதிவரை உடன் நின்றது. இனியும் நிற்கும். இந்நிலையில், ஒன்றிய அரசு, சுரங்கத் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வதுடன், அதற்கான அரசாணையும் வெளியிடப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
‘மாநில அரசின் உறுதிக்கு வெற்றி’
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது! இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோகக் கூடாது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களின் மகத்தான வெற்றி’
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், “அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை உள்ளடக்கிய மதுரை மேலூரின் 2015.51 எக்டர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க இச்செய்தி ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாது உறுதியுடன் போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி” என்று சு. வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். “எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது. ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளையும், தமிழக பாஜக-வின் மடைமாற்றும் உத்திகளையும் நம்பாமல் தமிழர் வரலாற்றுப் பெருமைகளையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் காக்கும் நோக்கில் மதுரை மக்கள் காட்டிய உறுதிப்பாடுக்கு முன் இன்று ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது. போராட்டங்களே நம் மண்ணை மீட்கும். நம் மக்களைக் காக்கும். இந்தப் போராட்டத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் களம்கண்ட அனைத்து அமைப்புகள், விவசாய பெருமக்கள், சூழல் ஆர்வலர்கள் என எல்லோருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி” எனவும் சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.