சென்னை, ஜன. 23 - 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள தாகவும், இதன் மூலம் தமிழ் நிலப் பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வை பிரகடனம் செய்வதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் வியாழன்று நடைபெற்றது. அப்போது, நூலினை வெளியிட்டும், தொல்லியல் துறை சார்பில், 5914 சதுர மீட்டர் பரப்பள வில் ரூ.17 கோடியே 10 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட உள்ள கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம், 2325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.22 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட விருக்கும் கங்கைகொண்ட சோழ புரம் அருங்காட்சியகம் ஆகிய வற்றிற்கு அடிக்கல் நாட்டியும், கீழடி இணையதளத்தைத் துவக்கி வைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியிருப்ப தாவது: “தமிழ்நாட்டில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வுகளின் மூலம் அண்மை யில் கிடைக்கப் பெற்ற காலக்கணக் கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000 ஆண்டின் முதற் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளன. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம். இதனை ஆய்வு முடிவு களாகவே நான் அறிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அக ழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரி கள் உலகின் தலைசிறந்த ஆய்வகங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனே நகரிலுள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரிலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் - பன்னாட்டு அளவில் உயரிய நிறுவன மான அமெரிக்க நாட்டு புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வ கத்திற்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வும் பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வும் ஒரே தாழியிலுள்ள மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இத்தகைய மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒரே மாதிரி யான பகுப்பாய்வு முடிவுகள் பெறப் பட்டன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பல்வேறு ஆய்வு நிறுவனங் களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப் பட்ட முடிவுகளை, கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவு கள் கிடைக்கப்பெற்றன. தற்போது கிடைத்துள்ள கதிரி யக்கக் காலக் கணக்கீடுகள் மற்றும் OSL பகுப்பாய்வு காலக்கணக்கீடு களின் அடிப்படையில் கி.மு. 3500 முற்பகுதிக்கு முன்பே தென்னிந்தியா வில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்பதை முன்வைக்கின்றன. இந்த பகுப்பாய்வு முடிவுகள் இந்தியாவில் உள்ள தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் இரும்பின் தோற்றத்தை யும் பண்டைய தொழில்நுட்பத்தைப் பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர் பெருமக்கள் ஆவார்கள். இவை அனைத்தையும் தொகுத்துத் தான் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை பெருமிதத்துடன் கூறு வோம். அதாவது 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவிக் கிறேன்.
இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம். தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன் வேளாண் பயிர்தொழிலில் நெல் பயிரிடப் பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தியது. தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன். தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்த வை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல. அரசியலுக்காகச் சொன்னவை அல்ல. வரலாற்று ஆதாரங்கள் - உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவை.” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் க. துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஆர். ராஜேந்திரன், அர. சக்கரபாணி, மா. சுப்பிரமணி, பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொல்லியல் துறை ஆணையர் த. உதயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.