சென்னை, ஜன.23- உ.பி., மற்றும் சண்டிகரில் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து வியாழனன்று (ஜன.23) நாடு முழுவதும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உ.பி. மாநிலத்தில் உள்ள தட்சி னாஞ்சல் வித்யுத் வீதரன் நிகம் மற்றும் பூர்வாஞ்சல் வித்யுத் வீதரன் நிகம் ஆகிய இரு கம்பெனிகளை தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி ஜன.23 அன்று திறக்கப்பட்டது. மேலும், சண்டிகர் யூனியன் பிரதேச மின்வாரியம் பிப்.1 முதல் தனியார்மயமாக்கப்படுகிறது. இதனை கண்டித்து அந்தந்த மாநில மின் ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் மின் ஊழியர்கள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதன் ஒருபகுதியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலை மையகம் முன்பு அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் உரையாற்றினர்.