புதுக்கோட்டை, ஜன.23:- கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கு தனது 4 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை போதிய இடவசதி இல்லாமல் இருப்பதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றி விரிவு படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மருத்துவமனை விரிவாக்கத்திற்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடந்த புதிய பேருந்து நிலையத்தை, புதிய மருத்துவமனையாக மாற்றுவது பொருத்தமாக இருக்கும் என அனைத்துத்தரப்பினரும் கருத்துத் தெரிவித்து வந்தனர். சீமாங் சென்டருக்கு கூடுதல் இடம் சட்டமன்ற உறுப்பினர் சின்னத் துரையின் தொடர் முயற்சியின் காரணமாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையிலான அதிகாரிகள், கடந்த மாதம் மேற்படி இடத்தை ஆய்வு செய்த பிறகு மருத்துவமனையை மாற்றலாம் என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கந்தர்வகோட்டையில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையமான ‘சீமாங் சென்டர்’ வர இருப்பதால் கட்டுமானப் பணிகளுக்காக கூடுதலான இடம் தேவைப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமனின் மகன் பவித்ரன், புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள, தனது 4 ஏக்கர் நிலத்தை மருத்துவமனைக்கு தானமாகக் கொடுக்க முன்வந்தார். இதனைத் தொடர்ந்து தனது 4 ஏக்கர் நிலத்தை மருத்துவமனைக்காக பத்திரப் பதிவு செய்து, கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னிலையில், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் விஜயலெட்சுமிடம் பவித்ரன் கடந்த புதன்கிழமையன்று வழங்கினார். இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் ஜி.ரெத்தினவேல் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 4 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய பவித்ரனுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.