மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள முன்னாமலைப்பட்டியைச் சேர்ந்த ஏ.தஸ்லிமா நஸ்ரின் (25). முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மாற்றுத்திற னாளியான தஸ்லிமா நஸ்ரின் பி.ஏ., வரலாறு பட்டதாரி ஆவார். தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி (ITK) திட்டத்தின் கீழ் வெள்ளரிப்பட்டி பஞ்சாயத்துக்கான 13 தன்னார்வலர் களில் ஒருவராக தஸ்லிமா நஸ்ரின் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் வெள்ளரிப்பட்டியில் மாலை நேர இல்லம் தேடி கல்விக்காக போதுமான அளவில் இடம் கிடைக்கவில்லை. அப்போது வெள்ளரிப்பட்டி மக்கள் முருகன் கோவிலைப் பயன்படுத்தி வகுப்புகளை நடத்திக் கொள்ளுங்கள் எனதஸ்லிமா நஸ்ரினிடம் கூறினர். ஒவ்வொரு நாள் மாலையும் தஸ்லிமா நஸ்ரின் வெள்ள ரிப்பட்டி முருகன் கோவிலின் உட்புற வாசலில் பாடம் நடத்தி வருகிறார். அதேபோல ஒவ்வொரு நாளும் தஸ்லிமா நஸ்ரின் வெள்ளரிப்பட்டி சென்றதும் மாணவர்கள் அவரை அன்போடு வரவேற்று முருகன் கோவிலுக்குள் அழைத்துச்செல்கின்றனர். தினமும் முருகன் கோவிலில் 20 குழந்தைகளுக்கு தஸ்லிமா நஸ்ரின் பாடம் கற்பிக்கிறார். ஒரு முஸ்லிம் பெண் முருகன் கோவிலில் நடமாடும் அழகிய காட்சியால் வெள்ளரிப்பட்டியில் மதநல்லிணக்கம் வித்தியாசமான முறையில் மலர்ந்துள்ளது. சில வருடங்களாக தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதால் வெள்ளரிபட்டி கிராம மக்கள் தஸ்லிமா நஸ்ரினுடன் உறவினர் போல நெருங்கி பழகிவருகின்றனர். அதனால் தான் குழந்தைகளின் கல்விக்காகவும், தஸ்லிமா நஸ்ரினுக்காகவும் முருகன் கோவிலின் கதவுகளைத் திறந்து மதநல்லிணக்கத்தை மலரச் செய்துள்ளனர்.