states

img

“ஊரே சாதிக்க முடியாததை ஒற்றை கம்யூனிஸ்ட் சாதித்து விடுவார்; அந்த வல்லமை கம்யூனிஸ்ட்டுகளுக்கே உண்டு!” - நாகை மாலி எம்எல்ஏ முழக்கம்

மயிலாடுதுறை, பிப்.11 -  “கம்யூனிஸ்ட் கட்சி போராட்டமே செய்வதில்லை என்று சிலர் பேசுகிறார்கள். குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அந்த அறிவிலிகளுக்கு நான் ஒன்று சொல்கிறேன் - மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இப்படி மாநிலம் முழுவதும் எத்தனை போராட்டங்கள்! எளிய மக்களின் உரிமைக்காக, அவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் களத்தில் நின்று போராடி வருகிறோம்!” என உணர்ச்சி ததும்ப குரல் எழுப்பினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற குழுத் தலைவருமான கீழ்வேளூர் எம்.எல்.ஏ நாகை மாலி. மயிலாடுதுறை மாவட்டத்தில் இலுப்பூர் தியாகி வீ.கோவிந்தராஜ் 42-வது நினைவு தின பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கம்யூனிஸ்ட்டுகளை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. மனிதகுலம் இருக்கும் வரை கம்யூனிசம் இருக்கும்!” என்று பலத்த கரவொலிக்கிடையே முழங்கினார்.  “இந்திய தேசத்தில் பாஜகவின் மதவெறிக்கும், இடதுசாரிகளின் மதச்சார்பற்ற தத்துவத்திற்கும் தான் மோதல்; இறுதியில் மதச்சார்பற்ற தத்துவம் தான் வெல்லும்!” என்று உறுதிபட தெரிவித்தார்.  “உலக வரலாற்றிலேயே மேற்கு வங்கத்தில் 7 முறை தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளோம். திரிபுராவில் 5 முறை ஆட்சி செய்துள்ளோம். தற்போது கேரளாவில் ஆட்சியில் இருக்கிறோம். தமிழ்நாட்டிலும் நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவோம் - லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம்!” என்று நம்பிக்கையுடன் அறிவித்தார்.  “பெரியார் பிறந்த மண் இது. பொதுவுடைமைவாதிகள் அரசியல் செய்யும் மண். டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகள் வேரூன்றிய மண். கம்யூனிஸ்ட்டுகள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் இருக்கும் வரை மதவெறி அமைப்புகளால் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.  அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்களை விலங்கிட்டு அழைத்து வந்த மோடி அரசின் செயலை கண்டித்த அவர், “இது இந்தியாவிற்கே பெரும் அவமானம்” என்றார். தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  பொதுக்கூட்டத்தில் கட்சியின் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்தனர். (ந.நி.)