1992 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதையொட்டி முந்தைய 13 மாநாடுகளைப் பற்றி கட்சியின் மகத்தான தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய கட்டுரை தொடர், தீக்கதிரில் வரிசையாக வெளியானது. அதே வரிசையில் தற்போது இங்கு இடம்பெறுகிறது.
1920ஆம் ஆண்டில், சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் கூடிய ஏழு பேரால் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” என்ற ஒரு ஸ்தாபனம் அமைக்கப்பட்டது. விரைவி லேயே அது கம்யூனிஸ்ட் அகிலம் அமைப்பின் அங்கீகாரத்தை ஓரளவுக்குப் பெற்றது. அத னால்தான் அந்த நிகழ்வையே இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தொடக்கமாக சிபிஐ (எம்) கருதுகிறது. இந்த ஸ்தாபனம் இந்திய மண்ணில் உருவாக்கப்படவில்லை என்பதால் அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கமாக ஒப்புக்கொள்ள சிபிஐ விரும்பவில்லை. இந்திய மண்ணிலேயே பிறந்த கம்யூ னிஸ்ட் கட்சி என்பது 1925 கான்பூரில் அமைக்கப்பட்டதுதான் - அதனையே கட்சி யின் தொடக்க ஆண்டாக சிபிஐ கருதுகிறது. 1925இல் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பானது, பிரிட்டிஷ் அரசு அதன் அனைத்துத் தலைவர்கள் மீதும் மீரட் சதி வழக்கைத் தொடுத்து குற்றம் சாட்டப்பட்ட தோழர்களை சிறையில் அடைத்ததை தொடர்ந்து, துரதிர்ஷ்டவசமாக உடைந்துபோனது. நான்கு ஆண்டுகளுக்குள் மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தோழர்கள் 1934 ஆம் ஆண்டில்தான் சிறையிலிருந்து வெளியே வந்து கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் உருவாக்கினர். அதன் பின்பு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்பட்டது. பின்னர் அது சிபிஐ (எம்) ஆகவும், புதிய சிபிஐ ஆகவும் இரண்டாகப் பிரிந்தது. அதன் பின்பு சிபிஐ(எம்) கட்சியிலிருந்து நக்சலைட் கோஷ்டியும், சிபிஐயிலிருந்து டாங்கே கோஷ்டியும் வெளியேறின.
தொடர்ந்து இயங்கும் கம்யூனிஸ்ட் இயக்கம்
இத்தகைய பிளவுகள் இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இன்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சிபிஐ (எம்), சிபிஐ இரண்டும் தனித்தனி கட்சி களாக நீடித்துக் கொண்டே ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து-இதர மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கத்துடனும் ஒத்துழைத்து- இ.காங்கிரசையும், பாஜக போன்ற வலது சாரி பிற்போக்கு வகுப்புவாத அமைப்புகளை யும் எதிர்க்கின்றன. முந்தைய நக்சலைட்டு களைச் சேர்ந்த ஒரு சிறுபிரிவினர் இப்போது சிபிஐ (எம்), சிபிஐ கட்சிகளோடு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு வடிவங்கள் உருவான போதிலும்கூட, இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் ஸ்தாபன இயக்கம் என்பது கடந்த 71 ஆண்டுகளாகத் (தற்போது 100 ஆண்டுகளைக் கடந்து) தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
முதல் மாநாடு கூட தாமதம் ஏன்?
ஆனால் தாஷ்கண்ட் நகரில் அமைக்கப்பட்ட குழு செயல்படத் துவங்கிய பிறகு 1943ம் ஆண்டில்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு கூடியது. அந்த தாமதத்துக்குக் காரணம் என்ன? அந்தகால கட்டத்தில் கம்யூனிஸ்ட் தோழர்கள் என்ன செய்துகொண்டிருந் தார்கள்? இந்தக் கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் சொல்ல முயல்கிறேன். தாஷ்கண்ட் நகரில்தான் முதலாவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். அதன் பின்பு, அதிக கால இடைவெளியின்றி, கம்யூனிஸ்ட் அகிலத்தின் முக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயம்- இந்தியா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நாடுகளின் நிலைமைகளை யும் நிகழ்ச்சிப் போக்குகளையும் எத்தகைய தொலை நோக்குடன் கம்யூனிஸ்ட்டுகளும் தேச விடுதலை இயக்கங்களும் காண வேண்டும் என்பது தான். இந்தியா, சீனா மற்றும் இதர நாடுகளிலிருந்து வந்த சில பிரதிநிதிகள், தமது நாடுகளின் மக்களை சோவியத் யூனியனைப் போல தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் சோவியத் (பஞ்சாயத்து) அமைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் முதலாளித்துவ தேசியத் தலைமைக்கு எதிராக அணிதிரட்ட வேண்டும் என்று வாதிட்டார்கள். லெனின் தலைமையிலிருந்த கம்யூ னிஸ்ட் அகிலத்தின் தலைமை அதை எதிர்த்தது. இவ்வாறு, அகிலத்தின் விவாத மேடை கடுமையான முரண்பாடுகளின் களமாக மாறியது. கடைசியில் அந்த அகிலம் பின்வரும் மூன்று முடிவுகளுக்கு வந்தது.
மூன்று முக்கிய முடிவுகள்
முதலாவதாக-இந்தியா, சீனா உள்ளிட்ட கீழை நாடுகளில் உள்ள முக்கியமான உடனடிப் பணி என்பது ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்தான் என முடிவு செய்யப்பட்டது. இதில் தொழிலா ளர் வர்க்கத்தைப் போலவே தேசிய முதலா ளிகளுக்கும் அக்கறை இருந்தது. எனவே தேசிய முதலாளிகளுக்கும் ஒரு பங்குள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியாக வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்த இயக்கத்தில் பிரதானமான முக்கிய சக்தி விவசாயிகள்தான். சொத்து டைமை விஷயத்தில் விவசாயிகள் தேசிய முதலாளிகளுக்கு பக்கத்தில் வருகிறவர் கள்தான் என்ற போதிலும், முதலாளித்து வத்திற்கு முந்தைய நிலப்பிரபுத்துவம் உள்ளிட்ட சகல அமைப்புகளையும் எதிர்த்து விவசாயிகள் ஒரு சமரசமற்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்; எனவே விவ சாயிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே ஒரு உறுதியான கூட்டை உருவாக்கி னால் மட்டுமே, தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகள் மத்தியில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரிவினருக்கும் இடையே ஒற்றுமை யை ஏற்படுத்த முடியும். இதைப் புரிந்து கொள்ளாமல், விவசாயிகளின் புரட்சி பற்றிய தொலை நோக்கு இல்லாமல், முதலாளி களுடன் ஒரு கூட்டினை ஏற்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் சந்தர்ப்பவாதத்துக்கே இட்டுச் செல்லும் என முடிவு செய்யப்பட்டது. மூன்றாவதாக இந்தியா முதலான கீழை நாடுகளில் தொழிலாளி வர்க்கம் ஒரு பல வீனமான சமுதாய சக்திதான். எனினும், இருக்கக்கூடிய தொழிலாளி வர்க்க ஊழியர்களும், தேசிய புரட்சிக்காரர்களின் முன்னணிப் படையினரும் உள்ளிட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட்டுகள் முயற்சி
இந்த மூன்று பணிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகும். ஏதாவது ஒன்றை விட்டுவிட்டு மற்ற இரண்டு பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுமானால் இந்த நாடுகளின் இளம் கம்யூனிஸ்ட்டுகளால் தமது பணிகளை நிறைவேற்ற இயலாமற்போகும். இந்த அடிப்படையில்தான் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டு வந்தனர். காங்கிரஸ் இயக்கத் திற்கு உள்ளேயே ஒரு இடதுசாரி அணியை உருவாக்கவும், அதில் காங்கிரசின் முன்னணி வீரர்களையும் இதர ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளையும் கம்யூனிஸ்ட்டுகளையும் ஒன்றுபடுத்திடவும் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் முனைந்தனர். அதன் விளைவாக கம்யூ னிஸ்ட்டுகளாலும் இதர இடதுசாரிகளாலும் “முழுச் சுதந்திரம்” என்ற முழக்கத்தை எழுப்ப முடிந்தது. காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த முதலாளித்துவ மிதவாத தலைவர்கள், “சுயாட்சி அந்த ஸ்து” மட்டுமே கோரியதற்கு மாறாக மேற் கண்ட “முழுச் சுதந்திரம்” என்ற முழக்கம் எழுந்தது. சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்கு இடதுசாரிகளை ஈர்க்க வேண்டி யது அவசியம் என்பது தெளிவாகப் புலப்பட்ட தால் காங்கிரசின் வலதுசாரி தலைவர்கள், இட துசாரி சார்பு கொண்டவரான ஜவஹர்லால் நேருவை காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர் (லாகூர், 1929). காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், தாம் ஒரு சோசலிசவாதி என்று வெளிப்படை யாக அறிவித்தார் நேரு. தேசிய புரட்சிக் காரர்களில் புகழ்பெற்றவரான பகத்சிங், தனது இறுதி நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தனது ஆதரவை அறிவித்தார். அது மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டினால் தான் இந்தியப் புரட்சி முன்னேறிச் செல்லும் என்ற முடிவுக்கும் அவர் வந்தார். சுருக்கமாக காங்கிரசை இடதுசாரி பாதைக்கு இழுப்பது என்ற நோக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளால் பெருமளவுக்கு வெற்றிபெற முடிந்தது. அதன் பலனாகத்தான். 1930-ஆம் ஆண்டுகளில், காங்கிரசுக்குள்ளேயே செயல்பட்டுக் கொண்டிருந்த சோசலிச வாதிகளின் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட்கட்சி’ என்ற ஸ்தாபனத்தை உருவாக்க முடிந்தது. நேருவும் லாகூர் மாநாட்டில், தாம் துவங்கி யதைத் (காங்கிரசை இடதுசாரி சார்புள்ள தாக்கும் முயற்சியை) தொடர்ந்து மேற்கொண் டார். 1936இல் காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் காங்கி ரசுக்குள் இருந்த கம்யூனிஸ்ட்டுகளையும் சோசலிஸ்ட்டுகளையும் இதர இடதுசாரி களையும் ஒன்றுபடுத்து வதற்கான ஒரு திட்டத்தைத் தயாரித்தார். அதன் மூலம் காங்கிரசை மேலும் இடதுசாரித் தன்மை கொண்டதாக்க முயன்றார். தனது தலைமை உரையிலும் மாநாட்டில் நிறைவேற்றச் செய்த தீர்மானங்களிலும் அவர் காங்கிரசை அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் ஒரு ஒன்றுபட்ட முன்னணியாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இரண்டு மாறுதல்கள்
இதனிடையே கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் இரண்டு முக்கிய மாறுதல்கள் நடந்தன. முதலில் 1935-இல் மாஸ்கோவில் கூடிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாடு, இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டணியை உரு வாக்க வேண்டும் என முடிவு செய்தது. அடுத்து 1929ல் சிறையில் அடைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் வெளியே வந்து கட்சியை மீண்டும் உருவாக்கினர். அவ்வாறு மீண்டும் உருவாக்கப்பட்டதற்கு நன்றாக வரை யறுக்கப்பட்ட ஒரு அரசியல் தொலைநோக்குக் கொள்கை அடிப்படையாக இருந்தது. ஒரு பக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளுடனும், நேரு உட்பட காங்கிரசுக்குள் இருந்த இடது சாரிகளுடனும் ஒத்துழைப்பது; இன்னொரு பக்கத்தில் தொழிற்சங்கங்களை மீண்டும் உருவாக்கி அவைகளின் ஒற்றுமையைக் கட்டுவது; விவசாயிகள், மாணவர்கள், எழுத்தாளர்கள் முதலிய பல்வேறு சுயேச்சை யான அமைப்புகளை உருவாக்கி இயக்கங் களை நடத்துவது.
கட்சிக்குத் தடை
அதே போன்று, 1936 முதல் 39 வரையில் காங்கிரசுக்குள்ளேயே இருந்த இடதுசாரி களாகக் கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டனர். அதற்குள் செயல்பட்டு கொண்டே தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர பிரிவு களைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஸ்தாபனங்களை வளர்ப்பதில் ஈடுபட்டனர். இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது சாரி காங்கிரஸ் இயக்கத்தின் வரலாற்றில் 1936 முதல் 39 வரையிலான மூன்றாண்டு காலம் ஒரு சிறப்பான அத்தியாயமாகும். அப்போதுதான் அதிகாரப்பூர்வமற்ற முறையில்தான் என்ற போதிலும் மத்தியிலும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கட்சியின் ஒரு பத்திரிகை (“தேசிய முன்னணி” - National Front) வெளியாகத் துவங்கியது. இந்த கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் சுயேச்சையான வெகுஜன ஸ்தாபனங்களிலும் செயல்பட முடிந்தது. சட்டப்பூர்வமான பத்திரிகைகளை ஆரம்பிக்க முடிந்தது. ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தங்களை ‘கம்யூ னிஸ்ட்டுகள்’ என அறிவித்துக் கொண்டே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது; ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு தங்க ளைக் ‘கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கள்’ என்று கூறிக் கொள்ள சுதந்திரம் கிடை யாது. சொல்லப் போனால் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஏடாக வந்த “தேசிய முன்னணி” மற்றும் கேரளத்தின் “பிரபாதம்” போன்ற மாநில ஏடுகள் தம்மைக் கட்சியின் ஏடுகளாகக் குறிப்பிடாமல் தான் வெளி யாகின. அதிகாரப்பூர்வமாக சட்டவிரோத மானது என அறிவிக்கப்பட கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாக இயங்கிவந்தது என்பது தான் இதன் அர்த்தம். இந்தச் சூழல்களில் கட்சியின் கீழ்மட்ட மாநாடுகளோ அகில இந்திய மாநாடுகளோ கூட முடியவில்லை. எனவேதான், சட்டப்பூர்வ மான செயல்பாடுகள் பெருமளவுக்கு இருந்தன என்ற போதிலும், அந்த மூன்றா ண்டு காலத்தில் (1936-39) கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும் மத்தியக் குழுவும் செயல்பட்டன என்ற போதிலும் - கட்சியின் முத லாவது அகில இந்திய மாநாடு கூடமுடியவில்லை. 1942ம் ஆண்டில்தான் கட்சி மீதான தடை விலக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து - ஒரே ஆண்டுக்குள் 1943 மே மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடு பம்பாய் நகரில் கூடியது.