ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னுடைய பட்ஜெட் உரையின்போது, அணு சக்தி சட்டம் (Atomic Energy Act) மற்றும் 2010ஆம் ஆண்டு அணு உலை விபத்து சிவில் பொறுப்புச் சட்டம் (The Civil Liability for Nuclear Damage Act, 2010--CLNDA) ஆகியவற்றைத் திருத்த அரசாங்கம் எண்ணி இருப்பதாக அறிவித்தி ருக்கிறார். அணு சக்தி சட்டத்திற்குத் திருத்தம் என்ப தன் பொருள் அணு சக்தி உற்பத்தியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் நம் நாட்டிற்குள் நுழைவதற்கு வசதி செய்துகொடுக்கப் போகிறார்கள் என்பதாகும். இது மிகவும் மோசமான சிந்தனையாகும். அணு உலை விபத்து சிவில் பொறுப்பு சட்டத்திற்கு திருத்தம் செய்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனெ னில், அணுசக்தி உலையில் விபத்து ஏற்பட்டு, அத னால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பான அம்சங்களை இத்திருத்தங்கள் நீர்த்துப்போகச் செய்தி டும். அது பொதுத்துறையாக இருந்தாலும் சரி, தனி யார்துறையாக இருந்தாலும் சரி. அணு உலை விபத்து சிவில் பொறுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் 2010இல் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் வெளிநாட்டு அணு சக்தி உலைகள் நிறு வப்பட்டு வர்த்தகம் மற்றும் விநியோகம் நடைபெறும் போது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிவில் அணு சக்தி பொறுப்பு சட்டம் அவசியமாகும்.
இடதுசாரி உறுப்பினர்களால் தடுக்கப்பட்டது
சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவிடமிருந்து 10,000 மெகாவாட் அணு உலைகளை வாங்குவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியளித்திருந்தது. இருப்பினும், இந்தச் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் விவா தத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அணு விபத்தில் பாதிக்கப்பட்ட எவருக்கும் போதுமான அள விலும், விரைவான முறையிலும் இழப்பீடு கிடைக் கும் வகையில் சட்டத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்தது. இதற்காக, 17(b) என்று ஒரு பிரிவு சேர்க்கப் பட்டது. இது அணு உலையை இயக்குபவர்கள் மட்டு மல்ல, அணு உலை மற்றும் உபகரணங்களின் விநியோ கஸ்தர்களுக்கும் பொறுப்பை வழங்குகிறது. 17(b) பிரிவை மாற்றுவதன் மூலம் அரசாங்கம் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயன்றது. ஆனால் நாடாளு மன்றத்திலிருந்த இடதுசாரி உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் அரசாங்கத்தின் மீது பொது மக்களின் அழுத்தத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான பிரச்சனை, போபால் விஷவாயு துயரத்தில் பாதிக்கப் பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்திடமிருந்து அதிகரித்த இழப்பீட்டைக் கோரிய அரசாங்கத்தின் மனுவை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிராகரித்ததாகும். அத்தகைய கோரிக்கைக்கு சட்டப்படி எந்த அடிப்படையும் இல்லை என்று நீதி மன்றம் கூறியது. அணு உலை விபத்து சிவில் பொறுப்புச் சட்டம் (CLNDA) ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, 2011 மார்ச் மாதத்தில் ஜப்பா னில் ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு விபத்து, கடுமையான சிவில் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தின் அவசி யத்தை எடுத்துக்காட்டியது. 17(b) போன்ற விதிகள் இல்லாமல், அணுசக்தி உபகரணங்களின் வெளி நாட்டு விநியோகஸ்தர்களை எந்தவொரு விபத்து அல்லது சேதத்திற்கும் பொறுப்பாக்க முடியாது என்பது தெளிவாகியது.
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு
அணு உலை விபத்து சிவில் பொறுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அணு உலைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக அமெ ரிக்கா, அணு உலைகளை விற்கவோ அல்லது அணு சக்தி துறையில் முதலீடுகளை செய்யவோ மறுத்து விட்டன. விநியோகஸ்தர்களின் பொறுப்பு சர்வதேச விதிமுறைகள் மற்றும் ஒப்பந்தக் கடமைகளுக்கு எதி ரானது என்று கூறிவந்த, வெளிநாட்டு நிறுவனங்களின் இந்த நிலைப்பாடு, வெளிநாட்டு அணு உலைகளை இந்தியாவில் நிறுவி இயக்குவதற்குப் பெரும் தடையாக இருந்து வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் விநியோகஸ்தர்களின் பொறுப்பு குறித்த பிரச்சனையை சமாளிக்க அல்லது தவிர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2015ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியா வருகை புரிந்தபோது, மோடி அரசாங்கம் அணு உலை விபத்து சிவில் பொறுப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. மேலும் பொறுப்புக்கான ஒட்டு மொத்த இடர் மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதி யாக இந்திய அணுசக்தி காப்பீட்டுக் குழுவை உரு வாக்கவும் பரிந்துரைத்தது. இருப்பினும், இது வெளி நாட்டு அணுசக்தி விநியோகஸ்தர்களிடமிருந்து நேர் மறையான பதிலைத் தூண்டவில்லை. அணு உலை விபத்து சிவில் பொறுப்புச் சட்டத்தைத் திருத்துமாறு அமெரிக்கா, இந்திய அரசாங்கத்தின் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இறுதி யாக மோடி அரசு அந்த அழுத்தத்திற்கு அடிபணிந்துள் ளது. தனியார் துறை அணு உலைகளை கட்டமைத்து இயக்க அனுமதிப்பது அணு விபத்துகளின் அபா யத்தை அதிகரித்திடும். இதுவரை, அணுசக்தி அரசுத் துறையில் இருந்து வருகிறது. மேலும் இந்திய அணு சக்தி கழகத்தால் இயக்கப்படும் அணு உலைகள் நல்ல பாதுகாப்புடன் இயங்கி வருகின்றன.
வெளிநாட்டு நிறுவனங்கள் தப்பித்துக் கொள்ளும்
அணு உலைகள் தனியார் துறையில் உருவாகி அணு உலை விபத்து சிவில் பொறுப்புச் சட்டம் திருத்தப்பட்டு, அதன்பின்னர் வெளிநாட்டு அணு உலைகள் இந்தியாவிற்குள் வருவதற்கு வழிசெய்து தந்து, அதன்பின்னர் அவற்றின்மூலம் விபத்துகள் ஏற் பட்டால், அந்த ஆபத்தின் விளைவுகளை இயக்குப வர்களே ஏற்க வேண்டும். இறுதியாக, பொறுப்பு இந்திய அரசின் பொறுப்பாக இருக்கும். மேலும் வெளி நாட்டு விநியோகஸ்தர்கள் அனைத்துவிதமான பொ றுப்புகளிலிருந்தும் தப்பித்துக்கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் அணு உலை விபத்து சிவில் பொறுப்புச் சட்டமுன்வடிவு மீதான விவாதம் நடை பெற்ற சமயத்தில் விநியோகஸ்தர்களின் பொறுப்பை அதில் சேர்க்க வேண்டும் என்பதை பாஜக-வும் ஆதரித்தது என்பதை இப்போது நினைவுபடுத்திடு வோம். ஆனால், இந்த உறுதியை இப்போதுள்ள அர சாங்கம் மீறுகிறது. இவ்வாறு செய்வதன்மூலம் “இந்தி யர்களின் உயிர்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல” என்ற செய்தியை அது அனைவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
பிப்ரவரி 5, 2025,
தமிழில் : ச.வீரமணி