states

img

ஐஐடி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி. - எஸ்.டி. இடங்கள் பறிப்பு! - சு. வெங்கடேசன் எம்.பி.

புதுதில்லி, பிப். 11 - ஐஐடி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் - பழங்குடியின மாணவர்களுக்கான 560 முனைவர் பட்டப் படிப்பு இடங்கள் குறைக்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஐஐடி-களில் (Indian Institutes of Technology - IIT),  2023 - 24 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனு மதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் (922/10.02.2025) கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவரங்களைத் துறைவாரியாக தருமாறும் குறிப்பிட்டிருந்தார். இதற்கான பதிலை, ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் நாடாளுமன்றத்தில் தந்துள்ளார். அதில் தான், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் - பழங்குடியின மாணவர்களுக்கான 560  முனைவர் பட்டப் படிப்பு இடங்கள் குறைக்கப்பட்டு இருக்கும் மோசடி அம்பலமாகி இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு, சு. வெங்கடேசன் எம்.பி. தமது சமூகவலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேலும் அவர் கூறியிருப்பதாவது:

ஒரே வரியில் பதிலளித்த ஒன்றிய அமைச்சர்

“நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்கள் அனு மதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 2484 பேர் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்கள் என்றும் ஒன்றிய இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜூம்தார் தெரிவித்திருக்கிறார்.  பதிலிலுள்ள மற்ற வரிகள் எல்லாம், எவ்வாறு ஒன்றிய அரசு ஐஐடி-களுக்கு இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி இருக்கிறது, அதை ஐஐடி நிறுவனங்கள் எவ்வாறு அமலாக்குகின்றன என்பதை பற்றிய வெற்று விளக்கங்களாகவே உள்ளன. 

முழுமையான விவரங்கள் வேண்டுமென்றே மூடிமறைப்பு

நான் கேள்வி எழுப்பியிருப்பது போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக- துறைவாரியாக- நிறுவன வாரியாக அமைச்சர் தரவில்லை. இது தற்செயலானதாக தெரியவில்லை. முழு விவரங்களைத் தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால், திட்டமிட்டே மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களின் மூலமாகவே, இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படாதது அம்பலமாகிவிட்டது. 590 இடங்கள் பறிப்பு உறுதியாகிறது 6210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2484 இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40 சதவிகிதம் மட்டுமே வருகிறது. ஓ.பி.சி. 27 சதவிகிதம், எஸ்.சி. 15 சதவிகிதம், எஸ்.டி. 7.5 சதவிகிதம் என்றால் மொத்தம் 49.5 சதவிகித இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும். இதன்படியே 590 இடங்களை எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. 

பொது இடங்களில் நிலைமை  என்ன?

பொதுப்பட்டியல் இடங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்களா? அல்லது அந்த இடங்கள் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடி-கள் இடஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொதுவெளிக்குத் தெரிய வரும்.  எனவே, நாடாளுமன்றத்தில் முழுமை யான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடு மாறும் கேட்டு, ஒன்றியக் கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.