சென்னை, பிப்.11 - சென்னை ஐஐடி மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியில் முக்கிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் கீழ், விண்வெளித் தரத்திலான செமிகண்டக்டர் சிப்பை முழுவதுமாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த சிப் சென்னை ஐஐடியின் சக்தி மைக்ரோபிராசசர் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. இது இஸ்ரோவின் திருவனந்தபுரம் மையத்தில் வடிவமைக்கப்பட்டு, சண்டிகர் செமிகண்டக்டர் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. பின்னர் கர்நாடகாவில் தொகுக்கப்பட்டு, குஜராத் மற்றும் சென்னையில் இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், “இது அவர்களின் மூன்றாவது சக்தி சிப் ஆகும். இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இந்த சிப்பை விரைவில் விண்வெளிப் பயணத்தில் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த முயற்சி இந்தியாவின் செமிகண்டக்டர் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது” என்றார்.