100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக் கட்ட முயலும் மோடி அரசு நாடாளுமன்றம் உள்ளேயும், வெளியிலும் இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
புதுதில்லி, டிச. 16 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGS), மகாத்மா காந்தி பெயரை நீக்குவதுடன், திட்டத்தின் பெயரையே ‘விபி-ஜி ராம் ஜி’ (‘விக்சித் பாரத் - ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் கிராமின் (VB–G RAM G) என மாற்றுவதற்கான மசோதாவை ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மக்களவையில் செவ்வாய்க்கிழமையன்று தாக்கல் செய்தார். இதற்கு, காங்கிரஸ், இடதுசாரி கள், திமுக, உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இடதுசாரிகள் ஆதரவுடன் நடை பெற்ற மன்மோகன்சிங் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி ஆட்சியில், 2005-ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் எனும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த 20 ஆண்டுகளாக, கிராமப்புற மக்க ளின் வறுமை ஒழிப்பில் முக்கியப் பங்காற்றி வருகிறது. உலகமே முடங்கிய கொரோனா காலத்திலும் கூட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதாக அமைந்தது. ஆனால், இத்திட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கு, 2014 முதல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முதலில், இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப் படும் நிதியை வெகுவாக வெட்டிய மோடி அரசு, அந்த நிதியையும் மாநி லங்களுக்கு தராமல், திட்டத்தை முடக்கியது. டிஜிட்டல் வருகைப் பதிவு உள்பட நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்து, பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பை மறுத்தது. இந்த பின்னணியில் தான், நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை, ‘விக்சித் பாரத்-ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று மாற்றியதுடன், மகாத்மா காந்தியின் பெயரையும் நீக்கியது. ஏற்கெனவே இருக்கும் 100 நாட்கள் என்ற வேலை திட்டத்தின் காலத்தை 125 நாட்களாக அதிகரிக் கிறோம் என்று கூறிக்கொண்டே, மறு புறத்தில் இதனை அமல்படுத்து வதற்கான நிதியை ஒன்றிய அரசு 60 சதவிகிதம் தான் தரும்; 40 சத விகிதத்தை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விதி களை மாற்றியுள்ளது. இது 100 நாள் வேலைத்திட்டத்தையே ஒழித்துக் கட்டும் சூழ்ச்சி என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நூறுநாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டில் 88.57 லட்சம் பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ. 4354 கோடியை ஒதுக்க வேண்டும் என்ற சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் நிதி வருவாய் இல்லாத மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிடும் சூழல் எழுந்துள்ளது. அந்த வகையிலேயே, ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்தபோது, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, முழக்கங்களை எழுப்பினர். இதனால், செவ்வாய்க்கிழமையன்று முற்பகல், மக்களவை முடங்கியது. நாடாளுமன்றத்திற்கு வெளி யிலும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் என்ற அடிப்படையிலும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
