tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பயன்பாட்டு நிலத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க எதிர்ப்பு  

திருவள்ளூர், டிச. 16- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ. 3 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க, சுமார் 6 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலம் பல ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்பட்டு, அவர்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. திங்களன்று (டிச. 15) பணிகள் தொடங்க அதிகாரிகள் முயன்றபோது, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பணிகளைத் தடுத்தனர். அதிகாரிகள் மறு ஆய்வு உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் செவ்வாயன்று பணிகள் தொடங்கவிருந்த நிலையில், தலித் மக்கள் மீண்டும் முற்றுகையிட்டுப் போராடினர். தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீண்டும் கோரிப் போராட்டம் தொடரும் என அவர்கள் வலி யுறுத்தினர். இதைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்புக்குப் குவிக்கப்பட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பூவலம்  பேடு ஊராட்சியில் உள்ள ஏரிகளுக்கு அருகில் மைதானம் அமைப்பதும், தரிசாக உள்ள பிற அரசு நிலங்களை விட்டு விட்டு, தாழ்த்தப்பட்டோர் பயன்பாட்டில் உள்ள நிலத்தைக் கையகப்படுத்துவதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சென்னை, டிச. 16- சென்னை ஜாபர்கான் பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.  ஜாபர்கான்பேட்டை நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் சீ.ஆனந்தன் (53). இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆனந்தன், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு கடந்த 13ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது  உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஆனந்தனை செவ்வாயன்று கைது செய்தனர்.