அலுப்பாக இருக்கிறதா? அந்த அலுப்பைப் போக்கி சுறுசுறுப்பாவதற்கு ஒரு நல்லவழி தான் புதிர் விளையாட்டு. விடையை முதலிலேயே பார்ப்பதில்லை என்ற உறுதியோடு வாருங்கள் விளையாடுவோம்.
எது சரியான பாதை?
நடப்பதும் ஓடுவதும் சைக்கிள் ஓட்டுவதும் தாள இசைக்கு ஆடுவதும் உடற்பயிற்சிகள். புதிர்களை அவிழ்ப்பது மூளைக்குப் பயிற்சி. விடையை நாமாகக் கண்டுபிடித்தால் கொண்டாட்டம். முயற்சி செய்து கண்டுபிடிக்க முடியாமல் விடையைப் படித்துத் தெரிந்துகொண்டால் கூட, “அட! இப்படி யோசிக்காமல் விட்டுவிட்டோமே,” என்ற வியப்பு. முயன்று பார்ப்பதற்கு உறுதியேற்றுக்கொண்டு வாருங்கள் புதிருக்குள் போவோம். ஒரு சாலையில் வருகிறீர்கள். உண்மையூர் என்ற ஊருக்கு நீங்கள் போக வேண்டும். அந்த ஊரில் வாழ்கிறவர்கள் எல்லோரும் உண்மையே பேசுவார்கள். பொய்யூர் என்ற ஒரு ஊரும் இருக்கிறது. அங்கே வசிக்கிறவர்கள் எல்லோரும் பொய்தான் சொல்வார்கள். சாலை ஓரிடத்தில் இரண்டு பாதைகளாகப் பிரிகிறது. ஒரு பாதை உண்மையூருக்கும், இன்னொரு பாதை பொய்யூருக்கும் இட்டுச் செல்லும். அங்கே அறிவிப்புப் பலகை எதுவும் வைக்கப்படவில்லை. உண்மையூருக்கு எந்தப் பாதையில் போக வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லை. இரண்டு பாதைகளும் பிரிகிற முனையில் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். அவர் அந்த இரண்டு ஊர்களில் ஒன்றில்தான் குடியிருக்கிறார், ஆனால் எந்த ஊரில் என்று உங்களுக்குத் தெரியாது. ஆகவே அவர் உண்மை சொல்வாரா பொய் சொல்வாரா என்றும் தெரியாது. அவரிடம் என்ன கேள்வியைக் கேட்டால் உண்மையூருக்கு எது சரியான பாதை என்று அறிய முடியும்?
புதிர் விளையாட்டு விடை
அவர் பொய்யூரைச் சேர்ந்தவர் என்றால், பொய்யாக உண்மையூருக்கான பாதையைத்தான் காட்டுவார். அவர் உண்மையூர்க்காரர் என்றால் அவரும் உண்மையாகத் தனது ஊருக்கான பாதையைத்தான் காட்டுவார். ஆகவே அவரிடம், “உங்கள் ஊருக்கு எந்தப் பாதையில் போக வேண்டும்,” என்று கேட்க வேண்டும். யோசிக்க வைக்கிற இந்த விடையை சரியாகக் கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள். கண்டுபிடிக்காதவர்களுக்கும் முயற்சி செய்ததற்காகப் பாராட்டுகள்.