tamilnadu

img

மூன்று மாதங்களில் கலைஞரின் கனவு நிறைவேறப் போகிறது... சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு...

மதுரை:
திமுக  சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலை மதுரையில் புதனன்று திறக்கப்பட்டது. சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு வெளிவீதி- சிம்மக்கல் சந்திப்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலை  திறப்பு விழா சட்டமன்ற  முன்னாள் உறுப்பினர்  கோ.தளபதி தலைமையில் நடைபெற்றது. மத்திய தொகுதி சட்டமன்ற  உறுப்பினர்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார். வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  பா.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின்  கலைஞரின் உருவச் சிலையை திறந்து வைத்தார். 

அவர் பேசுகையில், ‘‘கலைஞரின்  சிலையை மதுரையில் திறக்க பல தடைகள் இருந்தது. நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்பட்டு தற்போது சிலை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக பொது இடத்தில் கலைஞர் சிலை  வெற்றிகரமாக திறக்கப்பட்டுள்ளது. சிலை திறக்க முயற்சித்த  அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  மூன்று மாதங்களில் கலைஞர் கனவு நிறைவேறப் போகிறது’’  என்றார்.சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மற்றும்   கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், டி.தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், அர.சங்கரபாணி, ஐ.பி.செந்தில்குமார்,  சட்டமன்ற முன்னாள்  உறுப்பினர் வி.வேலுச்சாமி, மதுரை முன்னாள் மேயர் பெ. குழந்தைவேல், மல்லிகை எம்.பாலச்சந்தர், ஒ.பி.தீலிபன் சக்கரவர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மக்களவை உறுப்பினர்  சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்  கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ நிகழ்வில் கலந்துகொண்டார். வடக்கு மாவட்டச் செயலாளர் பெ.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.