புதுதில்லி, நவ. 25 - 42-ஆவது திருத்தம் மூலம், அரசியலமைப்பு சட்ட முகப்புரை யில், ‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற சொற்களை இணைத்தது செல்லும் என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக, டாக்டர் சுப்பிரமணியசாமி, அஸ்வினி குமார் உபாத்யாய, பல்ராம் சிங் ஆகிய ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் தொடர்ந்திருந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பில், 1976-ஆம் ஆண்டு, 42-வது திருத்தச் சட்டத்தின் பிரிவு 2-இன் கீழ் ‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகள் சேர்க்கப் பட்டிருந்தது. இதற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, பல்ராம் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். “சோசலிச கோட்பாடு மற்ற கோட்பாடுகளை விட சிறந்த தாக முடியாது; மேலும், பொரு ளாதார வளர்ச்சிக்கு, ஒரு குறிப் பிட்ட பொருளாதார கோட் பாட்டையே பின்பற்ற வேண்டும் என தேசத்தின் மீது திணிக்க முடி யாது” என்று மனுவில் கூறி யிருந்தனர். முகப்புரை என்பது, 1949 நவம்பர் 26 அன்று அரசிய லமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டதற்கான முன்னுரை அறிக்கையாகும். இதனை மாற்ற முடியாது. ஆனால், அதில், சோசலிச, மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் மாநிலங்களின் ஒப்பு தல் இல்லாமல் செய்யப்பட்டுள் ளது. இது மக்களின் விருப்பத் தை மீறியதாக நடந்துள்ளது. எனவே, 1976-இல் செய்த மாற்றங்கள் ‘அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி’ என்று அஸ்வினி குமார் உபாத்யாய குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்த நிலையில், திங்களன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், 42-ஆவது திருத்தம் மூலம், அரசியலமைப்பு சட்ட முகப்புரையில், ‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற சொற்களை இணைத்தது செல்லும் என்று கூறி, சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரின் மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “முகப்புரை என்பது, அரசிய லமைப்பிற்கு அந்நியமானது அல்ல, அதன் ஒருங்கிணைந்த பகுதி தான். எனவே, 368-வது பிரிவின் கீழ் அரசியலமைப்பை திருத்துவதற்கு உள்ள அதி காரம், அரசியலமைப்பின் முகப்புரைக்கும் பொருந்தும். ‘சோசலிசம்’ என்ற வார்த்தை யைப் பொறுத்தவரை, அது அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ‘பொது நல அரசு’ என்பதையே குறிக் கிறது. முகப்புரையில் இணைக்க ப்பட்ட சோசலிசம் என்ற வார்த்தை, தேசத்தின் வளர்ச்சிக் காக எந்த ஒரு பொருளாதாரக் கோட்பாட்டையும் பின்பற்று வதைத் தடுக்கவில்லை. இந்தி யாவில் சோசலிசம் என்ற கருத்து தனியார் நிறுவனங்களின் பங்க ளிப்பையோ அல்லது தனித்து வத்தை நிராகரிக்கவோ இல்லை. அதேபோல மதச்சார் பின்மை எப்போதும், நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி யாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பகுதி III-இன் கீழ் உள்ள உரிமைகளை ஒருவர் உற்றுநோக்கினால், அவற்றில் மதச்சார்பற்ற நிலை முக்கிய அம்சமாக இருப்பதை தெளிவாக காண முடியும். எனவே, சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை இரண்டும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் அங்கமாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.