tamilnadu

img

அதானியின் லஞ்ச விவகாரத்தை விவாதிக்க மோடி அரசு மறுப்பு!

புதுதில்லி, நவ. 25 - அதானியின் ரூ. 2029 கோடி லஞ்சம், மணிப்பூர்  வன்முறை குறித்து விவாதிக்க ஒன்றிய பாஜக அரசு மறுத்து விட்டதால், முதல் நாளே நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் நாள் முழுவதும்முடங்கின. நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திங்களன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. அவை  நடவடிக்கைகள் துவங்கியதும், மக்களவையில் மறைந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல்  குறிப்பு வாசிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.  தொடர்ந்து 12.00 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போது, அதானியின் ரூ. 2029 கோடி லஞ்ச விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களில் தாங்கள் அளித்துள்ள ஒத்திவைப்பு நோட்டீஸை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். நாட்டில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய  மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள  சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250  மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 2,029 கோடி) லஞ்சம்  கொடுத்ததாக தொழிலதிபா் கவுதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம் சாட்டப்பட்டது.

எனவே, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர்கள் கே.சி. வேணுகோபால், மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் நோட்டீஸ் அளித்திருந்தனர்.  வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் நோட்டீஸ் அளித்திருந்தார். தில்லி காற்று மாசுபாடு குறித்து குறுகிய கால விவாதத்தை நடத்தக் கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன் நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால், இந்த நோட்டீஸூகள் எதையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்து விட்டார்.  இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மாநிலங்களவையிலும், அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கும் அமளி ஏற்பட்டு, அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே, அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படுவதன் காரணமாக, செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தின் வழக்கமான அலுவல்கள் நடைபெறாது என்றும், நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு  அமா்வு செவ்வாய்க்கிழமை (நவ.26) நடைபெறும், இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்ற உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.