tamilnadu

img

மறவேன் உன்னை - புலிகரம்பலூர் அ.பொன்னையன்

அம்மா உன்னை அறிவேன் நன்றாய்
       அன்பின் உருவம் என்றே
எம்மாம் நாள்நீ பாலும் சோறும்
       எனக்க ளித்தாய் நின்றே!

ஆட்டங் காட்டி முத்தம் கொடுத்தே
       அணைத்தாய்த் தூக்கித் தோளும்
பாட்டுப் பாடித் தூங்க வைத்தாய்
       பார்த்து மகிழ்ந்தாய் நாளும்!

கதைகள் சொல்லிக் காட்சிகள் காட்டி
        கற்றுத் தந்தாய் கல்வி
விதைகள் முளைத்தே அவைகள் வளர
          விரும்பும் கலையின் செல்வி!

 எல்லாம் கற்பேன் எல்லாம் உணர்வேன்
        இருப்பேன்  அறிவின் ஆளாய்
சொல்லால் உண்மைச சொல்வேன் உன்னை
       சுமப்பேன் என்றன் தோளாய்!

கண்ணில் காணும் தெய்வம் நீதான்
     காப்பேன்  என்றும் உன்னை  
மண்ணில் வாழும் வணங்கும் தெய்வம்
      மறவேன் உன்றன் தன்னை!