tamilnadu

img

“சிப்பிக்குள் முத்து” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரெஞ்சு நாடகங்கள் (Boulevard Theater) கள்ள உறவு, முக்கோணக் காதல் இவற்றையே கதைக்களங்களாகக் கொண்டிருந்தன.மிகைப்படுத்தப்பட்ட சூழல்களில் நகைச்சுவை உரையாடல்கள் இதன் தனிச்சிறப்பு. இவ்வகை நாடக மரபை விமர்சித்து, பிரான்சு இயக்குநர்  குயென்டின் டியூபியூக்ஸ் (Quentin Dupieux) அன்பை மையப் பொருளாக்கி இயக்கியுள்ள படம் “Yannick”.

இது 2023 இல் வெளிவந்தது யானிக் என்பவர் வாகன  நிறுத்துமிட இரவுநேரக் காவலர்; வீடற்றவர். “தி குக்கோல்டு” என்ற நாடகம் பார்க்க  பாரீஸ் நகருக்கு வருகிறார். நாடகத்தில்  கணவன் மனைவியாக பவுல் மற்றும் ஷோபியும், பவுலின் நண்ப ராக வில்லியம் ஆகிய மூன்று பாத்திரங்கள் மட்டுமே. மனைவியை சந்தேகப்பட்டு கணவன் திட்டிக் கொண்டிருக்கிற காட்சி.நாடகக் கதை யான்னிக்கிற்கு சலிப்பைத் தருகிறது. பொறுமை இழந்த யான்னிக் யாரும் எதிர்பாரா வண்ணம் நிகழ்ச்சியில் குறுக்கிட்டு நாடகத்தை நிறுத்துகிறார். வாழ்க்கைப் பிரச்னைகளை மறந்து, மகிழ நாடகத்தைப் பார்க்க வந்துள்ள தனக்கு  இந்த இந்நாடகம் துயரத்தையே தருகிறது. இயக்கு நரிடம் புகாரளிக்க முயலுகையில்,அவர் இல்லாமலே நாடகம் நடப்பதை அறிந்து வியக்கிறார். பார்வையாளர்கள் நாடகத்துக்கு இடையூறு செய்யா மல் அரங்கை விட்டு வெளியெற யான்னிக்கை வலியுறுத்து கின்றனர்.அவரும் வெளியேறுகிறார்.ஆனால் யான்னிக் வெளியேறும் சமயத்தில், நடிகர் பவுல்,யான்னிக் பேசு வது போல் பேசி கிண்டலடிக்க,அரங்கம் சிரிக்கிறது. இதனால்  கோபமுற்ற யான்னிக் அரங்கிற்குள் மீண்டும்  நுழைகிறார்; அரங்கத்தை துப்பாக்கி முனையில் தன்கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். உப்புச் சப்பற்ற இந்நாடகத்தைப் போலின்றி தான் இங்கேயே ஒரு நாடகத்தை எழுதி நடத்திக்காட்டப் போவ தாகக் கூறி புதிய ஸ்கிரிப்டை மேடையிலே தயா ரிக்கிறார். நடிகர்கள் மூவரிடமும் அதன் நகலை வழங்கி, ஒத்திகைப் பார்க்கச் சொல்கிறார். பார்வையாளர்கள் ரசிக்கும்படி புதிய நாடகத்தை, யான்னிக் நடத்திக் காட்டும் விதமே கதை.        பல சுவாரஸ்யங்கள் நிறைந்த இப்படம்  67 நிமிடமே  ஓடக்கூடியது. இது ஏற்படுத்தும்  நகைச்சுவை உணர்வின்  தாக்கம் சிலிர்ப்பானது.

ஷோபி தனது கணவனாக நடித்த பவுலிடம், யானிக்கிடமிருந்த துப்பாக்கியை பறித்தால்,அவளது இரவுப் படுக்கையை பவுலுடன் பகிரத் தயாராக இருப்ப தாகக் கூறுகிறாள். அப்போது கணவனின் நண்பனாக நடிக்கும் வில்லியம் கதறுகிறான். அதற்கவள்,பவுலை தைரியப் படுத்துவதற்கு கூறியதாக சமாளிப்பாள்.இது  நம்மை நெளிய வைக்கும் அன்னியப்பட்ட காட்சி. யான்னிக் என்றால் ஹீப்ரு மொழியில்”கடவுள் கருணை யானவன்”என்ற அர்த்தம் கூகுளில் உள்ளதாக கையில்  துப்பாக்கியோடு பணயக் கைதிகளிடம் விளக்குகின்ற காட்சி ஒரு நகைமுரண். யானிக் உருவாக்கிய ஸ்கிரிப்ட்-ன்படி, நாடகம்  சிறப்பாக நடப்பதை,மறைந்திருந்து கண்காணித்து, இயக்கிக் கொண்டிருப்பார்.அப்போது எழும் ரசி கர்களின் கைத்தட்டலை ரசித்து, சிறுகுழந்தை போல் கண்ணீர் மல்க அன்பிற்கு ஏங்குவார்.அக்காட்சியின் பின்னணியில் வரும் தீமேடிக் இசை அபாரம். உணவகத்தில் சாப்பாடு சரியில்லை என்றால் தலைமை சமையலரிடம் புகார் அளிக்கின்றோம்.சேவை  சரியில்லை என்றால் சேவை நிறுவனத் தலைமை யிடம் தானே புகாரளிக்க முடியும். அதுபோல் நாடகம்  சரியில்லை என்றால் இயக்குநர் தானே பொறுப்பு என யான்னிக் கோரிக்கை வைப்பதும்; கலையை விமர்சிப்பது அக மனது (Subjective)சார்ந்தது என்றும், உணவு சரியில்லை என்பதையும், கலையை விமர்சிப்பதையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது என்ற பவுலின் பதிலும், தர்க்கத்தை உருவாக்கும் கூர்மையான வசனங்கள்.

நாடக அரங்கிற்குள்ளே முழுப்படமும் உரு வாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு,படத்தொகுப்பு,திரைக் கதையாக்கம் மற்றும் இயக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளை யும் குயென்டின் டியூபியூக்ஸ் பாராட்டும்படி சிறப்பாக செய்துள்ளார். 2024ல் சிறந்த திரைக்கதைக்  கான பிரான்சின் லூமியர்ஸ் விருது இவருக்கு இப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.         2023-க்கான,ஸ்விட்சர்லாந்தின் லொகார்னோ திரைப்படவிழாவில் ஐரோப்பிய சினிமாவிற்கான லேபிள் விருதை இப்படம் வென்றுள்ளது. ராஃபேல் குயினார்ட் என்ற பிரெஞ்ச் நடிகர் யான்னிக் ஆக நடித்துள்ளார்.பிரமிப்பை ஏற்படுத்தும் உணர்வுப்பூர்வமான நடிப்பைத் தந்துள்ளார்.சிறந்த நடிகருக்கான, 2023-பிரான்சின் ஷெஸ்ஸார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.      திறமைகளை வெளிக்காட்டாத யான்னிக்-ஐ சாதா ரண ஆளென,நாடக நடிகர்கள் முன்னதாகவே அனு மானிக்கிறார்கள்.அரங்கின் எலக்ட்ரிஷியன், துப்பாக்கியை யான்னிக்டமிருந்து பறித்த நடிகர் பவுலையே கடத்தல்காரன் என அனுமானித்துத் தாக்கு கிறான். இறுதியில் பணயக்கைதிகள் எவரையும் தொந்தரவு செய்யாத ஆயுதம் தாங்கிய யானிக்,புதிய ஸ்கிரிப்ட் மூலம் நல்ல நாடகத்தை தந்து,நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் அன்பை ஒருசேரப் பெறும்போது, அதிரடிப்படை அவனைக் கைது செய்ய நுழைகிறது. முன் அனுமானம்,நேரில் கிண்டலடிப்பது,ஆளை போக விட்டு கேலி செய்வது,போன்றவற்றை கதை  போக்கில் நுட்பமாகவும்,கறுப்பு நகைச்சுவை யிலும்(Black Comedy) சிறப்பாகச் சொல்லியுள்ளது இப்படம்.MUBI-ல் உள்ளது.